ஆசை வார்த்தைகளை கூறி.. பெண்கள் பிய்த்து எறியப்படும் கொடூரம்! வறுமை தான் காரணமா?

varumai
வறுமையென்பது பணம் இல்லாததால் மட்டுமல்ல, ஒரு மனிதனின் முழு ஆற்றலை பயன்படுத்த முடியாததும் வறுமை தான் என்றார் பொருளாதார மேதை அமர்த்தியா சென்.

இதை அமெரிக்க நிறுவனங்கள் எப்படி புரிந்து கொண்டார்களோ இந்தியர்களை பயன்படுத்திக் கொள்கிறோம் என்று களத்தில் இறங்கிவிட்டார்கள்.

தோல் திருட்டு :
வறுமையை காரணம் காட்டி, பெண்களை மையப்படுத்தி இந்த மருத்துவ உலகில் வாடகைத் தாய், கருமுட்டை தானம் என ஏராளமான சுரண்டல்கள் நடந்து வருகின்றன இதற்கு அடுத்தக்கட்டமாக ‘தோல் திருட்டு’ இப்போது விஸ்வரூபமெடுத்து வருகிறது. நமது உடலில் அதிகமாக இருக்கும் பகுதி தோல் தான். வெளியில் காணப்படும் தோல் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி அழகாக தெரிய வேண்டும் என்று பலரும் குறிப்பாக மேல்தட்டு மக்கள் விரும்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

தோல் சந்தை :
ஆரோக்கியத்தை தாண்டி அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நூற்றாண்டில் தோலுக்கு மிகப்பெரிய சந்தையுண்டு. 100 செ.மீ., சதுர அளவு கொண்ட தோல் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்கப்படுகிறது. இவை பெரும்பாலும் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யும் போது பயன்படுத்துவார்கள்.

இந்தியாவில் களமிறங்கிய அமெரிக்க நிறுவனங்கள் :
அமெரிக்காவில் பத்துக்கும் மேற்ப்பட்ட கம்பெனிகள் இருக்கின்றன. அவற்றின் வேலையே தோலையும் தோலில் இருக்க வேண்டிய திசுக்களை உற்பத்தி செய்வது,அவை வளர்வதற்கான திசுக்களை கண்டுபிடித்து சந்தைபடுத்துவது தான்.

ஆரம்பத்தில் இறந்த மனிதர்களின் தோலை அவர்களது உறவினர்கள் அனுமதியின்றி திருடப்படுகிறது என்று அமெரிக்காவில் செயல்படும் Food and Drug Administration (FDA), US நிறுவனம் குற்றம் சுமத்தியது.

இதை சமாளிக்கவே வெளிநாட்டிலிருந்துதோல்களை இறக்குமதி செய்ய நினைத்தார்கள். காரணம், FDA வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை என்றால் அதில் தலையிடாது.

அமெரிக்க நிறுவனங்களுக்காக இங்கு அங்கீகரிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத ஏராளமான திசு வங்கிகள் அவர்களது ஏஜெண்ட்டுகள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் மூலமாக மூலப்பொருளான தோல் வாங்கப்பட்டு, அமெரிக்காவில் முழுமை பெறச் செய்து மீண்டும் இங்கேயே விற்கப்படுகிறது.

திருட்டு கும்பல் :
பெரும்பாலும் இதற்கு ஏஜெண்ட்டுகள் கைவைக்கும் இடம் பாலியல் தொழிலாளர்களைத் தான். அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி மூளைச் சலவை செய்யப்பட்ட பெண்ணை, நேபாளிலிருந்து இந்தோ நேபாள் எல்லை வழியாக இந்தியாவில் இருக்கும் ஏஜெண்ட்டிடம் கைமாற்றப்படுகிறாள்.

அங்கிருந்து இன்னொரு ஏஜென்ட்டிடம் கைமாற்றப்பட்டு நான்காவது அல்லது ஐந்தாவது ஏஜெண்ட்டிடம் ஒப்படைக்கப்படுகிறாள்.

அங்கு ‘என்னுடைய தோலை எனது சுய விருப்பத்தின் பேரில் தானமாக வழங்க முன்வருகிறேன்.
இதை நான் பணத்திற்காக விற்கவில்லை’ என்று கையெழுத்து வாங்கப்படுகிறது.

ஸ்ட்ரிக்ட் ஏஜெண்ட்டுகள் :
ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு தோல் சாம்ப்பிள் கொடுக்க வேண்டும் என்றாலே 30,000 ரூபாய் வரை கையில் வாங்கிக்கொண்டு தான் கொடுக்கிறார்கள் இந்த ஸ்ட்ரிக்ட் ஏஜெண்ட்டுகள்.

இதில் பாதியாவது தங்களின் தோலை பிய்த்து தானமாக வழங்கியவருக்கு போய் சேருகிறதா என்றால் இல்லை என்பது மட்டும் தான் நிஜம்.

பெயரளவில் சிறிய தொகை மட்டுமே அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மொத்த லாபமும் ஏஜண்ட்டுகளுக்கே போய் சேருகிறது.

உருமாரும் தோல்கள் :
இப்படி எடுக்கப்பட்ட சாம்பில்களை பல்வேறு திசுக்களை ஆராயும் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு சோதிக்கப்பட்ட பிறகு வெளிநாட்டு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அங்கு அழகு சாதனத்திற்கு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தும் தோலாக உருமாற்றி சந்தையில் விற்கப்படுகிறது.

தெரிந்து தெரியாமலும் :
தோல் தானம் பெண்களுக்கு தெரிந்து மட்டுமல்ல அவர்களுக்கு தெரியாமலும் எடுக்கப்படுகிறது.
முதலில் அவர்களுக்கு போதை மருந்தோ அல்லது மயக்க மருந்து கொடுத்தோ மயக்கமுறச் செய்து கை கால்களை கட்டுகிறார்கள்.

அவள் சுயநினைவின்றி இருக்கும் வேலையில் அவளது உடலிலிருந்து தோல் பிய்த்து எடுக்கிறார்கள்.
மயக்கம் தெளிந்து சுய நினைவுக்கு வந்தவுடன் அவ்விடத்தை விட்டு தப்பிக்க வேண்டும் என்று நினைத்து ஓடுகிறாளே தவிர தன்னுடைய உடலிலிருந்து தோலை பிய்த்து திருடிவிட்டார்கள் என்று கற்பனை செய்யக்கூட அவளுக்கு தோன்றவில்லை பாவம்.

அண்டர் வோர்ல்டு ஆப்ரேசன் :
இன்னமும் இந்திய மற்றும் நேபாள அதிகாரிகளுக்கு தங்கள் நாடு எப்படி தோல் சம்பந்தப்பட்ட மூலப்பொருட்களை பெறும் கூடம் ஆனது என்பதை கண்டுபிடிக்கவோ அவற்றை ஒழிக்கவோ முடியவில்லை.

காரணம் அண்டர் வோர்ல்டு ஆப்ரேசன் போல சத்தமின்றி நடப்பது ஒரு காரணம் என்றால் இந்தப்பக்கம், வறுமையை ஜெயித்திட வேண்டும் அழகெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டேயில்லை என தங்களையே பிய்த்து எறிய ஒரு கூட்டம், அந்தப்பக்கமோ ஒரு கூட்டம் அழகு தான் முக்கியம் அதற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று லட்சக்கணக்கில் செலவழிக்க தயாராய் இருப்பதும் தான் மூலக்காரணம்.