தோல்வியின் பிடியிலிருந்து தப்பித்தது ஆஸ்திரேலியா

மினி உலகக்கிண்ணத் தொடரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மழை குறுக்கீடு செய்ததால் நியூசிலாந்தின் திடீர் எழுச்சி வீணானது. இதனால் தோல்வியின் பிடியில் இருந்து ஆஸ்திரேலிய அணி தப்பித்துக் கொண்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்த அணி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆரம்ப வீரரான கப்ரில் ஆட்டமிழந்தார். மழை குறுக்கீடு செய்ததால் ஆட்டம் 46 பந்துப்பரிமாற்றங்களாகக் குறைக்கப்பட்டது.

ரோஞ்சி, வில்லியம்சன் இணைந்து ஆட்டத்தில் நியூசிலாந்தின் ஆதிக்கத்தை வலுவாக நிலைநாட்டினர். இருவரும் அரைச்சதம் கடந்தனர். ஆடுகளம் துடுப்பாட்டத்துக்குச் சாதகமானது என்பதால் அடித்தாடினார் ரோஞ்சி. அவர் 65 ஓட்ஙட்களுடன் ஆட்டமிழந்தார். வில்லியம்சன் சதம் கடந்தார். அவர் 100 ஓட்டங்களுடன் ரண்அவுட் செய்யப்பட்டார். 45ஆவது பந்துப்பரிமாற்றத்தில் மூன்று இலக்குகளை அள்ளினார் ஹசில்வூட். முடிவில் 291 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது நியூசிலாந்து அணி.

பந்துவீச்சில் ஹசில்வூட் 6 இலக்குகளையும், ஹஸ்ரிங்ஸ் 2 இலக்குகளையும், கம்மின்ஸ் ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா துடுப்பெடுத்தாட முன்னர் இரண்டாவது தடவையாக மழை குறுக்கிட்டது. இதனால் அந்த அணிக்கு 33 பந்துப்பரிமாற்றங்களில் 235 ஓட்டங்கள் இலக்காகக் கொடுக்கப்பட்டது. அந்த அணி 3 இலக்குகளை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மூன்றாவது முறையாகவும் மழை குறுக்கிட ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.