சாம்பியன்ஸ் டிராபில் தடால்புடால் அதிரடி வேலைக்காகாது: கேதர் ஜாதவ் எச்சரிக்கை

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது அவருக்க முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடர்.

இந்த தொடர் குறித்து கேதர் ஜாதவ் கூறுகையில் ‘‘முந்தைய ஆட்டத்தில் ஒவ்வொரு ரன் எடுக்கவும் பேட்ஸ்மேன்கள் கடினமாக போராடியதை பார்க்க முடிந்தது. சீதோசனை நிலை அடிக்கடி மாறுவதால் நிலைத்து நின்று ஆடுவது எளிதான காரியம் அல்ல.

ஆடுகளத்தில் புற்கள் இருந்ததுடன், தட்பவெப்ப நிலையும் மாறியதால் பந்து ஸ்விங் ஆனது. இதுபோன்ற நிலைலையில் வரும் போட்டிகள் அமைந்தால், ஆக்ரோஷமாக விளையாடினால் வேலைக்காகாது.

உங்களால் சற்று ஆக்ரோஷமாக பேட்டிங் செய்ய இயலும். ஆனால், டெஸ்ட் மற்றும் ரஞ்சி போட்டியில் ஆடுவதுபோல் டெக்னிக்கலாக பேட்டிங் செய்ய வேண்டும். எல்லா பந்துகளையும் அடித்து விளையாட வேண்டும் என்று நினைக்கக்கூடாது. சிறந்த பந்தை விட்டுவிட வேண்டும். ரன்அடிக்க ஏதுவாக வரும் பந்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரன் குவிக்க வேண்டும்.

இது எனக்கு முதலாவது ஐ.சி.சி. போட்டியாகும். இந்த போட்டியில் விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இந்த போட்டிக்கு நாங்கள் நன்கு தயாராகி இருக்கிறோம். எல்லா அணிகளுக்கு எதிராகவும் ஆடுவதை போல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் ஆர்வமுடன் விளையாடுவோம்.

வலைப்பயிற்சியில் உடலை தாக்கும் வகையில் வரும் பந்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பயிற்சி எடுத்து வருகிறேன்’’ என்றார்.