சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவதில் ஆர்வமாக இருக்கிறேன்: கேதர் ஜாதவ்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் லண்டனில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘முந்தைய ஆட்டத்தில் ஒவ்வொரு ரன் எடுக்கவும் பேட்ஸ்மேன்கள் கடினமாக போராடியதை பார்க்க முடிந்தது.

ஆடுகளத்தின் தன்மை அடிக்கடி மாறுவதால் நிலைத்து நின்று ஆடுவது எளிதான காரியம் அல்ல. ஆடுகளத்தில் புற்கள் இருந்ததுடன், தட்பவெப்ப நிலையும் மாறியதால் பந்து ஸ்விங் ஆனது. இதனால் இங்கு ஆக்ரோஷமாக விளையாடினால் பொருந்தாது. டெஸ்ட் மற்றும் ரஞ்சி போட்டியில் ஆடுவது போல் பொறுமை காத்து ஆட வேண்டும். எல்லா பந்துகளையும் அடித்து விளையாட வேண்டும் என்று நினைக்கக்கூடாது.

இது எனக்கு முதலாவது ஐ.சி.சி. போட்டியாகும். இந்த போட்டியில் விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இந்த போட்டிக்கு நாங்கள் நன்கு தயாராகி இருக்கிறோம். எல்லா அணிகளுக்கு எதிராகவும் ஆடுவதை போல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் ஆர்வமுடன் விளையாடுவோம்’ என்று தெரிவித்தார்.