உலக நாடுகளின் கண்டனங்களை புறம்தள்ளி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபை கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை.

இதனால் கொரிய தீப கற்பகத்தில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தென் கொரியாவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. புதிய அதிபராக மூன் ஜெ-இன் பதவி ஏற்றார். தகுந்த நேரம் வரும் போது வட கொரியா சென்று அதன் தலைவர் கிம் ஜாங்-யங்கை சந்திப்பேன் என்று அறிவித்தார். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பதட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை பொய்யாக்கும் விதத்தில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது.

அந்நாட்டு நேரப்படி காலை 7.30 மணியளவில் தெற்கு கடற்பகுதியில் சிறிய ரக அணு ஆயுதங்களை சுமந்து 450 கிலோ மீட்டர் வரை செல்லும் ஏவுகணையை பரிசோதித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. குறுகிய கால இடைவெளியில் சுமார் மூன்று ஏவுகணைகளை அந்நாடு பரிசோதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியா ஏவுகணை பரிசோதனை செய்த கொஞ்ச நேரத்திலேயே, தென்கொரிய அதிபர் மூன் ஜெ-இன் தலைமையிலான அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ” வடகொரியாவின் இந்த செயல் ஐ.நா. விதிமுறைகளை மீறுவதை காட்டுகிறது” என ஜப்பான் காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

வடகொரியா ஏவுகணை தொடர்பாக வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்-க்கு சில விளக்கங்கள் பாதுகாப்பு துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.