ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஷரபோவா போராடி தோல்வி

ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா 15 மாத தடைக்காலம் முடிந்து ஸ்டட்கார்க் ஓபன் மூலம் மீண்டும் டென்னிஸ் களத்தில் அடியெடுத்து வைத்தார். முதல் சுற்று, 2-வது சுற்று மற்றும் காலிறுதியில் வெற்றி பெற்ற அவர், நேற்று அரையிறுதியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா மிலாடெனோவிச்சை எதிர்கொண்டார்.

முதல் செட்டை மரியா ஷரபோவா 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டில் மிலாடெனோவிச் அபாரமாக விளையாடினார். மரியா ஷரபோவாவும் இணையாக போராட இறுதியில் மிலாடெனோவிச் 7-5 என அந்த செட்டை கைப்பற்றினார்.

வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் மிலாடெனோவிச்சின் கையே ஓங்கியது. அவர் 6-4 என 3-வது செட்டை கைப்பற்றி ஷரபோவாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

15 மாதம் தடைக்குப்பின் களமிறங்கிய ஷரபோவா அரையிறுதிக்கு நுழைந்த திருப்யோடு வெளியேறினார்.