சிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ்: ஆதாரத்தை வெளியிடப்போவதாக பிரான்ஸ் அறிவிப்பு!

சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.

இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 87 பேர் உயிரிழந்தனர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் விஷவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த விஷவாயு தாக்குதலுக்கு ரஷ்ய மற்றும் சிரிய ராணுவம் தான் காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளது. குளோரின் வி‌ஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. சபை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ் ஈடுபட்டிருப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. மேலும் வரும் நாட்களில் சிரிய அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான ஆதாரத்தையும் பிரான்ஸ் அரசு சமர்பிக்க உள்ளதாகவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-மார்க் ஐரால்ட் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக இந்த தாக்குதலுக்கு சிரிய அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  அவரை சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.