அஸ்வினுக்குப் மாற்று யார்?: வாஷிங்டன் சுந்தர், பர்வேஸ் ரசூல், நாதன் லயன் இடையே கடும்போட்டி

ஐ.பி.எல். சீசன்-10 டி20 கிரிக்கெட் லீக் புதன்கிழமை (ஏப்ரல் 5) தொடங்குகிறது. இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளதால் கிரிக்கெட் ஜூரம் பற்றி கொண்டது. இந்திய அணி தொடர்ச்சியாக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதால் பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல். தொடரின் தொடக்கத்தில் கலந்து கொள்வார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அஸ்வின் காயம் காரணமாக ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் இருந்து விலகியுள்ளார். முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் விலகியது, அந்த அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்வின் இடத்தை நிரப்ப முடியாது என்றாலும், அவரது இடத்திற்கு ஈடுகொடுக்கும் அளவில் சிறந்த சுழற்பந்து வீச்சாளரை தேடும் பணியில் அந்த அணி ஈடுபட்டுள்ளது.
புனே அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்மித், அணி உரிமையாளரிடம் சக நாட்டைச் சேர்ந்த நாதன் லயனை அணியில் எடுக்குமாறு கூறியதாக தெரிகிறது.
ஆனால், அணி நிர்வானம் தமிழ்நாட்டின் இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர், ஜம்மு-காஷ்மீர் வீரரான பர்வேஸ் ரசூல் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளது. அவர்கள் நாளை காலை ஒத்திகைக்காக செல்ல இருக்கிறார்கள். ஒத்திகையில் அவர்கள் செயல்பாடு திருப்தியாக இருந்தால் இருவரில் ஒருவரை அணி தேர்வு செய்ய வாய்ப்பிருக்கிறது.
இருவரில் வாஷிங்டன் சுந்தருக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், தியோதர் மற்றும் விஜய் ஹசாரே தொடரில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும் அஸ்வின் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது (லயன், பர்வேஸ் ரசூல், வாஷிங்டன் சுந்தர்) அணி நிர்வாகம் கையில்தான் இருக்கிறது.