அமெரிக்காவில் கல்வி பயில இந்திய மாணவர்களிடையே ஆர்வம் குறைகிறது!

அமெரிக்காவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெறுவதில் இந்திய மாணவர்களிடையே மிகுந்த ஆர்வம் காணப்பட்டது. ஆனால் அங்கு தற்போது அமைந்துள்ள டிரம்ப் அரசு, வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் உள்நாட்டினருக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இதற்காக வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச்1பி விசாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அங்கு சமீப காலமாக வெளிநாட்டினர் மீதான குறிப்பாக இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

இதனால் இந்தியர்களின் அமெரிக்க மோகம் குறைந்து வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இது அங்குள்ள கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் எதிரொலித்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது இளங்கலை பிரிவுகளில் 26 சதவீதமும், பட்டதாரி வகுப்பில் 15 சதவீதமும் இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்து உள்ளதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவின் உயர்கல்வித்துறையில் 40 சதவீத வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளது.

இது தொடர்பான விரிவான அறிக்கை இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் தற்போது படித்து வரும் சர்வதேச மாணவர்களில் 47 சதவீதத்தினர் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.