உலக கோப்பை போட்டியில் டோனி ஆடுவாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் மகேந்திரசிங் டோனி. 20 ஓவர் உலக கோப்பையை 2007-ம் ஆண்டும், ஒருநாள் போட்டி உலக கோப்பையை 2011-ம் ஆண்டும் அவர் பெற்றுக் கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

இந்திய அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக திகழ்ந்த டோனி 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டனாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பு அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஒவர் அணியில் மட்டும் விளையாடி வருகிறார்.

ஆட்டத்தை வெற்றி கரமாக முடித்து வைப்பதில் வல்லவரான டோனி 2019-ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பையில் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி போட்டி அவரது தலைவிதியை நிர்ணயம் செய்யும். இது தொடர்பாக டோனியின் சிறுவயது பயிற்சியாளர் கே‌ஷவ் பானர்ஜி கூறியதாவது:-

35 வயதான டோனி இன்னும் திறமையுடன் தான் உள்ளார். ஆட்டத்தை அவரால் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிகிறது. மிகவும் புத்தி கூர்மையுடன் இருக்கிறார். தற்போது அவரது கவனம் எல்லாம் ஜூன் மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி மீது தான் இருக்கிறது.

சாம்பியன் டிராபி போட்டியில் வெற்றிகரமாக செயல்பட்டால் அவர் 2019 உலக கோப்பை வரை விளையாடுவார் என்று கருதுகிறேன்.

ஐ.பி.எல். போட்டிக்கான புனே அணி கேப்டன் பதவியில் இருந்து டோனி நீக்கியது சரியானது அல்ல.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டி டோனியின் எதிர்காலத்தை முடிவு செய்யும். இதோடு அவர் ஓய்வு பெறலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.