ராஞ்சி டெஸ்டில் இந்தியாவிற்குத்தான் நெருக்கடி, எங்களுக்கல்ல: லயன் சொல்கிறார்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட்கள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

3-வது போட்டி ராஞ்சியில் 16-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை தக்க வைத்துக் கொள்ளும். இதனால் இரு அணிகளுக்கும் நெருக்கடி இருக்கும். ஆனால் எங்களை விட இந்தியாவிற்குத்தான் அதிக நெருக்கடி என்று ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நான் லயன் கூறுகையில் ‘‘டெஸ்ட் தொடரை தக்க வைத்துக் கொள்ள எங்களுக்கு ஒரு வெற்றிதான் தேவையுள்ளது. அதை ஏன் நாங்கள் ராஞ்சியில் செய்யக் கூடாது. நெருக்கடி இந்தியா மீது தான் உள்ளது. எங்கள் மீது எந்தவித நெருக்கடியும் இல்லை.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன் ஒவ்வொருவரும் ‘ஆஸ்திரேலியா தொடரை 4-0 என இழக்கும். அவர்கள் சிறந்த அணி இல்லை. அந்த அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் இந்தியாவில் சிறப்பாக விளையாடமாட்டார்கள்’ என்று சொன்னார்கள்.

முதல் டெஸ்டில் நாங்கள் சிறந்த அணி என்பதை நிரூபித்தோம். 2-வது போட்டியில் நாங்கள் வெற்றியை நெருங்கி வந்தோம். அதன்பின் தோல்வியடைந்து விட்டோம். எனவே உண்மையிலேயே இந்திய அணிக்குத்தான் கூடுதல் நெருக்கடி இருக்கும்’’ என்றார்.