ஆஸ்திரேலியாவிற்கு பெரிய இழப்பு: காயத்தால் இந்தியா தொடரில் இருந்து ஸ்டார்க் விலகல்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருக்கும் நிலையில் 3-வது போட்டி 16-ந்தேதி ராஞ்சியில் நடக்கிறது. இந்த டெஸ்டில் வென்று எப்படியும் தொடரை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலியா நினைத்துள்ளது. இந்த நிலையில் அந்த அணிக்கு பேரிடியாக ஒரு செய்தி விழுந்துள்ளது. அது வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்பதுதான்.

2-வது போட்டியின்போது அவருக்கு இலேசான வலி இருந்துள்ளது. அது சரியாகிவிடும் என்று நினைத்தனர். ஆனால் வலி அதிகமாகவே, ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அப்போது கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அவர் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.

ஸ்டார்க் விலகியுள்ளதால் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்காக மாற்று வீரரை அந்த அணி தேர்வு செய்யவில்லை. ஏற்கனவே அந்த அணியில் ஜேக்சன் பேர்டு உள்ளார். ராஞ்சி போடடியில் பேர்டு களம் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

புனே டெஸ்டில் ஒரே ஓவரில் புஜாரா மற்றும் விராட் கோலியை வீழ்த்தியதுடன், முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். பெங்களூரு டெஸ்டில் ஒரே ஓவரில் ரகானே மற்றும் கருண் நாயர் ஆகியோரை அவுட்டாக்கி  வெளியேற்றினார்.