ஐ.எஸ். தீவிரவாதிகளை சிரியாவுக்குள் புகுந்து தாக்குவோம்: ஈராக் அறிவிப்பு

ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி வைத்து இருந்தனர். இதில், ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த பல பகுதிகளை ஈராக் படைகள் மீட்டு விட்டன.

கடைசியாக மொசூல் நகரம் மட்டும் அவர்கள் பிடியில் இருந்தது. அந்த நகரை பிடிப்பதற்கு பல மாதங்களாக சண்டை நடந்து வருகிறது. நகரின் கிழக்கு பகுதியை ஏற்கனவே முற்றிலும் கைப்பற்றி இருந்த ஈராக் படைகள் தற்போது மேற்கு பகுதியை ஒவ்வொன்றாக கைப்பற்றி வருகின்றனர்.

ஈராக் படைகளுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அங்கிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளில் பலர் வெளியேறி விட்டனர். குறிப்பிட்ட சிலர் மட்டும் தொடர்ந்து அங்கிருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மொசூல் நகரின் தலைமை அரசு அலுவலகம், அருங்காட்சியகம், மத்திய வங்கி அலுவலகம் ஆகியவற்றை தற்போது மீட்டுள்ளனர்.

மிக விரைவில் மொசூல் நகரம் முழுவதையும் ஈராக் படைகள் கைப்பற்றி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஈராக்கில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றிலும் விரட்டியடிக்கப்பட்டு விடுவார்கள்.

இங்கிருந்து தப்பி செல்லும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவுக்குள் செல்கிறார்கள். எனவே, ஈராக் ராணுவம் சிரியாவுக்குள்கும் புகுந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாட முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ஈராக் பிரதமர் ஹைதர் அலி அபாதி கூறும் போது, ஈராக்கில் இருந்து விரைவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றிலும் விரட்டியடிக்கப்பட்டு விடுவார்கள்.

அவர்கள் சிரியாவுக்குள் தப்பி ஓடுவதால் நாங்களும் அவர்களை பின் தொடர்ந்து சென்று சிரியாவுக்குள் புகுந்து தாக்குவோம். இது மட்டும் அல்ல. எங்கள் எல்லைகளில் உள்ள மற்ற நாடுகளிலும் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாட நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்த நாடுகள் அனுமதித்தால் அங்கும் தாக்குதலை தொடங்குவோம் என்று கூறினார்.