ரகானேவை டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக பயன்படுத்துவோம்: கும்ப்ளே

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக் கிழமை தொடங்குகிறது.

இந்திய அணியில் கடந்த 2013-ல் இருந்து 2015 உலகக்கோப்பை வரை தவானும், ரோகித் சர்மாவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வந்தார்கள். தற்போது ரோகித் சர்மா காயம் காரணமாக இந்த தொடரில் இடம்பெறவில்லை.

இந்த அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ரகானே கடந்த சில போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை. அவர் மிடில் ஆர்டரில் களம் இறங்கும்போதும், தொடக்க வீரராக களம் இறங்கும்போதும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.

தற்போது இந்த தொடரை அவர் சரியாக பயன்படுத்தவில்லை எனில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம்பிடிப்பது கேள்விக்குறியாகிவிடும். நேற்று நடைபெற்ற பயிற்சி் ஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறங்கிய ரகானே 83 பந்தில் 91 ரன்கள் குவித்தார். இதனால் தொடக்க வீரராக களம் இறக்கப்படலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

மேலும் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். இவர் இந்த தொடரில் ஆடும் லெவனில் இடம்பிடிப்பது உறுதியாகியுள்ளது. இதனால் யார் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘தற்போதைய நேரம் வரை ரகானேவை டாப் ஆர்டரில் களம் இறக்கும் வாய்ப்பு மட்டுமே உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டிங் ஆர்டர் குறித்து நான் யோசிக்கவில்லை. ஆகவே. தற்போது வரை அவர் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில்தான் இருந்து கொண்டிருக்கிறார்.

யுவராஜ் சிங்கை அணியில் சேர்த்தது நல்ல முடிவு. அவரது பந்து வீச்சு மற்றும் பேட்டிங் திறமை குறித்து எங்களுக்குத் தெரியும். அதே சமயத்தில் மணிஷ் பாண்டே மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மிகவும் அற்புதமான இந்த தேர்வால், மிடில் ஆர்டரில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. யாராக இருந்தாலும் அனைத்து இடத்திற்கும் நல்ல போட்டி இருப்பதைதான் விரும்புவார்கள். இது எல்லாம் ஆடுகளம், ஆடுகளத்தின் மேற்பரப்பு மற்றும் சரியான அணிக்கு என்னத் தேவை என்பதை பொறுத்து இருக்கிறது’’ என்றார்.