முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவருமான சவுரவ் கங்குலி, மேதினிபூர் மாவட்டத்தில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டு இருந்தார். மாவட்ட விளையாட்டு கூட்டமைப்பும், வித்யாசாகர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி 19-ந் தேதி நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கங்குலி கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். மிரட்டல் விடுத்து அவர் எழுதியிருந்த கடிதம் கடந்த வாரம் கங்குலியின் வீட்டுக்கு வந்தது. இது குறித்து உள்ளூர் போலீசில் புகார் செய்த கங்குலி, இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், கங்குலிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மேதினிபூர் நகரை சேர்ந்த நிர்மல்யா சமந்தா என்பவரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் மேதினிபூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.