பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்: ‘நோ’ சொன்னது வெஸ்ட் இண்டீஸ்

பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய இலங்கை அணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பின் முன்னணி அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்தது.

இந்நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் வரவேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்திருந்தது.

பாதுகாப்பு குறித்து எந்தவொரு அச்சமும் ஏற்படவில்லை என்றால் பாகிஸ்தான் வந்து விளையாட தயாராக இருக்கும். அதற்கு முன்பு பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

இதனால் தொடரை நடத்திவிடலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பியிருந்தது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் சம்மேளனம் பாகிஸ்தானில் வீரர்களுக்கான பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்தது.

இதனால் பாகிஸ்தான் சென்று விளையாடும் முடிவை வெஸ்ட் இண்டீஸ் மாற்றியுள்ளது. மேலும், பாகிஸ்தான் பரிந்துரையை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.