2-வது பயிற்சி ஆட்டம்: இந்திய ‘ஏ’ அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி!!

இங்கிலாந்து லெவன் – இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் இன்று பகல் ஆட்டமாக மும்பையில் நடைபெற்றது. இன்றைய போட்டிக்கான இந்திய ‘ஏ’ அணிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து லெவன் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் ராய் மற்றும் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராய் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஹேல்ஸ் 53 பந்தில் 51 ரன்கள் சேர்த்த நிலையில் நதீப் பந்தில் பெவிலியின் திரும்பினார்.

அடுத்து வந்த பேர்ஸ்டோவ் 64 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த வீரர்கள் சுழற்பந்தில் சிக்கித் திணறினார்கள். நதீம் மற்றும் ரசூல் ஆகியோரின் சிறப்பாக பந்து வீச இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 282 ரன்கள் சேர்த்தது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் பர்வேஸ் ரசூல் 3 விக்கெட்டும், சங்வான், டின்டா, நதீம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. ரகானே, ஷெல்டன் ஜாக்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 18.5 ஓவரில் 119 ரன்கள் சேர்த்தது. ஜாக்சன் 59 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து இளம் வீரரான விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் களம் இறங்கினார். 19 வயதே ஆன அவர், இங்கிலாந்தின் பந்து வீச்சுக்கு சற்றும் அஞ்சாமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் குவித்தார். மறுமுனையில் விளையாடிய ரகானே 83 பந்தில் 91 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ரெய்னா அதிரடியாக விளையாடி 34 பந்தில் 45 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்தியா ஏ அணி 39.4 ஓவரிலேயே 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த நிலையில் 283 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.