ஆக்ரோசமான விராட் கோலிக்கு ஏற்ற வகையில் என்னை தயார் செய்ய வேண்டும்: அஸ்வின்

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் தலைமையின் கீழ் சுமார் இரண்டு ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஆனால் ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் தலைமையில் விளையாடியதில்லை. இலங்கை அணிக்கெதிராக ஒரேயொரு தொடரில் மட்டும் அஸ்வின் விராட் கோலியின் தலைமயின் கீழ் விளையாடியுள்ளார்.

2010-ம் ஆண்டில் இருந்து ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் அஸ்வின், டோனி தலைமயின் கீழ் 6 வருடங்கள் விளையாடி உள்ளார்.

விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்பதால் டோனிக்கும் தனக்கும் இடையிலான கம்யூனிகேசனை விட விராட் கோலிக்கு தனக்கும் இடையிலான கம்யூனிகேசன் மாறுபட்டதாக இருக்க போகிறது. இதனால் அதற்கு ஏற்றவாது தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், விராட் கோலியுடன் இணைந்து செயல்படுவது குறித்து கூறுகையில் ‘‘விராட் கோலிக்கும் எனக்கும் இடையிலான உரையாடல் மிகவும் மாறுபட்டதாக இருக்கிறது. டோனியுடன் விளையடியதுபோல் தற்போது இருக்கப்போவதில்லை. டோனி கேப்டனாக இருக்கும்போது தகவல்கள் கீப்பரிடம் (டோனி கேப்டன்) இருந்து கிடைக்கும்.

தற்போது விராட் கோலி ஷார்ட் மிட்விக்கெட் அல்லது ஷார்ட் கவர் போன்ற திசையில்தான் பீல்டிங் செய்வார். இதனால் தகவல் பரிமாறப்படும் இடம் மாறுவதால் வித்தியாசமாக இருக்கப்போகிறது. விராட் கோலியின் தகவல்களை பெற்று சிறப்பாக செயல்பட முயற்சி செய்வோம்.

நான் விரட் கோலியின் தலைமையின் கீழ் ஆர்.சி.பி. அல்லது வேறு ஏதாவது அணியிலேயோ விளையாடியது கிடையாது. ஒரேயொரு தொடரில்தான் (இலங்கை) கோலியின் தலைமையில் விளையாடியுள்ளேன்.

தற்போதைய சூழ்நிலையில் விராட் கோலியின் தலைமையில் சற்று ஆக்ரோஷசமாக விளையாட வேண்டியிருக்கும். அதனால் ஒரு விஷயம் என்னவென்றால் அதற்கு ஏற்றவாறு என்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வேன். மிடில் ஓவரின்போது நெருக்கடியாக பந்து வீசி விக்கெட்டுக்களை கைப்பற்ற வேண்டும் என்று கோலி ஆசைப்படுவார். அதற்காக சில ரன்களை விட்டுக்கொடுக்க நேரிடும். உண்மையிலேயே சில ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டுக்களை கைப்பற்றுவது மோசமான விஷயம் அல்ல.

ஆனால் டோனி மிடில் ஓவர்களில் விக்கெட்டுக்களை வீழ்த்த முடியாவிட்டாலும் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று சுழற்பந்து வீச்சாளர்களிடம் வலியுறுத்துவார்.

டோனி ஒருநாள் தொடரில் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். ஏனெனில் அவர்தான் விக்கெட் கீப்பர். மேலும் அவரது அனுபவம் அவரை முன் நிறுத்தம். இதுதான் முக்கியமான செல்லப்போகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை அவரிடம் பெற்று அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல முயற்சி செய்வோம்.