வட கொரியாவிடம் 10 அணுகுண்டுகளை தயாரிக்க புளூட்டோனியம் உள்ளது: தென் கொரியா தகவல்!

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே ஏற்பட்ட பகைமை இன்றுவரை தொடர்கிறது. தென் கொரியாவுக்கு நெருங்கிய நட்பு நாடாகவும், வடகொரியாவுவின் நிரந்தர எதிரி நாடாகவும் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அணு ஆயுதங்கள் தேவை எனக் கருதிய வடகொரியா, சர்வதேச தடைகளை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது.

இதுவரை 5 முறை அணு ஆயுத சோதனைகளையும், பல்வேறு ஏவுகணை சோதனைகளையும் நடத்தி உள்ள வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. கிட்டத்தட்ட உலக நாடுகளால் தனித்துவிடப்பட்ட நிலையிலும், தற்காப்பு என்ற பெயரில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

அவ்வகையில், மேலும் 10 அணு குண்டுகளை தயாரிக்கும் வகையில் வடகொரியாவிடம் புளூட்டோனியம் இருப்பு உள்ளதாக தென் கொரியா தற்போது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

‘வடகொரியாவிடம் 2016ம் ஆண்டு இறுதி நிலவரப்படி அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் 10 கிலோ அளவுக்கு புளூட்டோனியம் இருந்தது. இதை வைத்து 10 அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும். 8 ஆண்டுகளுக்கு முன்பு 40  கிலோ அளவுக்கு வைத்திருந்தது.

இதேபோல் மிகவும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்து ஆயுதங்கள் தயாரிக்கும் திறனை வட கொரியா பெற்றிருக்கிறது. ஆனால், ஆயுத தயாரிப்பு யுரேனியம் எவ்வளவு இருப்பு உள்ளது என்பது தெரியவில்லை’ என தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.