மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டதை நம்ப முடியவில்லை: கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி புனேயில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) கிரிக்கெட்டுக்கும் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதை உண்மையிலேயே நம்ப முடியவில்லை.

எனது வாழ்க்கையில் இப்படியொரு நாள் வரும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. இந்திய அணிக்குள் நுழைந்த போது, சிறப்பாக விளையாடி மென்மேலும் வாய்ப்புகளை பெற வேண்டும், தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. மூன்று வடிவிலான அணியின் கேப்டனாக எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள். எல்லாமே எனக்கு கடவுள் கொடுத்ததாக நினைக்கிறேன். உங்களது வாழ்க்கையில் ஏதாவது ஒன்று நடக்க வேண்டும் என்று இருந்தால் அது நடப்பதற்கு ஒரு காரணம் இருக்கும். அது சரியான நேரத்தில் நடக்கும்’ என்றார்.

இந்திய அணியின் கேப்டன் பதவியை நெருக்கடியாக கருதுகிறீர்களா என்று கோலியிடம் கேட்ட போது, ‘இது ஒரு நெருக்கடி இல்லாத பணி என்று சொல்லமாட்டேன். எப்படி இருந்தாலும் இது ஒரு ஜாலியான விஷயம் தான்’ என்றார்.

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை தொடர்ந்து கேப்டனாக இருந்தால் அது மிகப்பெரிய கவுரவமாக இருக்கும் என்றும் கோலி குறிப்பிட்டார்.