இங்கிலாந்து தொடருக்கு அச்சுறுத்தல் இல்லை: லோதா குழு அறிவிப்பு!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான குழு பல்வேறு பரிந்துரைகளை செய்தது.

70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் நிர்வாகத்தில் இருக்க கூடாது. ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு, மத்திய மந்திரிகள், அதிகாரிகள் நிர்வாக பதவியில் இருக்க கூடாது. ஒருவருக்கு ஒரே பதவி உள்பட பல்வேறு பரிந்துரைகளை அறிவித்தது. கிரிக்கெட் வாரியமும் மாநில சங்கங்களும் இந்த பரிந்துரைகளை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் கிரிக்கெட் வாரியம் லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தியது. இதை தொடர்ந்து கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அதிரடியாக நீக்கி சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது.

இதற்கிடையே இந்தியா- இங்கிலாந்து ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர் நடைபெறுவதில் பிரச்சினை இருப்பதாகவும், போட்டியை ரத்து செய்து விடுமாறும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் ஜைல்ஸ் கிளார்க்கிடம், சுப்ரீம் கோர்ட்டால் நீக்கப்பட்ட அஜய் ஷிர்கே தெரிவித்து இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அவர் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோக்ரிக்கு இமெயில் மூலம் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘ஷிர்கேயிடம் இருந்து எனக்கு தகவல் வந்தது. அவர் கிரிக்கெட் வாரிய செயலாளராக இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு நாள் தொடர் நடைபெறுமா? என்பதை உறுதி செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும், இந்தப் போட்டிக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று லோதா குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நீதிபதி ஆர்.எம். லோதா கூறியதாவது:-

இந்தியா- இங்கிலாந்து ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடருக்கு எந்த பாதிப்பும் இல்லை. போட்டிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும்.

தற்போது கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் அதிகாரம் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோக்ரியிடம் லோதா குழு ஒப்படைத்துள்ளது. அவரே அதிகாரம் மிக்கவர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. கிரிக்கெட் போட்டியை பாதிக்க எந்த வகையிலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் நடைபெறும் எந்த ஒரு போட்டிக்கும் இடையூறு செய்ய மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களிடம் இருந்து பெறுவது அவசியம் என்று தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோக்ரியிடம் லோதா குழு தெரிவித்துள்ளது.