ஒன்றிணைந்த எதிர்க்கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து முன்னெடுக்கும் ஆட்சியே பலமானது!

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து முன்னெடுக்கும் ஆட்சியே பலமானதாக காணப்படும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவபிரிய தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

மைத்திரி மற்றும் மஹிந்த இணைந்து முன்னெடுக்கும் ஆட்சிக்கு ஆதரவு வழங்குவதில் எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மைத்திரிபால சிறிசேன தற்போது, அதே கட்சியுடன் இணைந்து செயற்படுகிறார்.

அதேபோன்று மைத்திரியும் மகிந்தவும் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பதில் எந்தவொரு ஆச்சர்யமும் இல்லை.

பொது வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் தலைவராக உள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான எல்லா தகுதியும் மைத்திரிபால சிறிசேனவிற்கு உள்ளது. அத்துடன் மக்களும் இதனையே எதிர்ப்பார்க்கின்றனர்.

இதேவேளை மைத்திரிபால சிறிசேனவின் அடுத்த ஆட்சியின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்தே பிரதமரும் தெரிவு செய்யப்பட வேண்டும் என அவர் இதன்போது வலியுருத்தினார்.

மேலும், மேல்மாகாண சபைக்காக ஒதுக்கப்படும் நிதி தொகையில் மாற்றம் ஏற்படுத்தி ஆட்சியை மாற்றியமைக்க முடியாது என்பதை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என இசுறு தேவபிரிய சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.