இலங்கை மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பு!

நாட்டில் காணப்படும் வறட்சியான காலநிலை தொடர்ந்து நீடித்தால், மின்சாரம் தடைப்படும் அபாயம் ஏற்படும் என இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நீர் மின்சார உற்பத்தில் 12 வீதம் குறைவடைந்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நீர் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பல நீர்த்தேங்களின் நீர் மட்டங்கள் 50 வீதம் வரையில் குறைந்துள்ளது. இந்நிலையில், மழை பெய்யவில்லை என்றால் தினமும் ஒரு வீதம் என்ற அளவில் நீர் மட்டம் குறைவடையும் என கூறப்படுகின்றது.

நீர் மட்டம் 20 வீதம் வரை குறைவடையும் போது மின்சார உற்பத்தி நிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் மாதங்களுக்கு மழை கிடைக்கவில்லை என்றால் மின்சார உற்பத்தி முழுமையாக நிறுத்தப்படும் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் முழுமையான மின்சக்தி பயன்பாடு 41 வீதம் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளப்படுகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் மொத்த உற்பத்தித்திறன் மின்சார நுகர்வு 21 வீதமாகும்.

எப்படியிருப்பினும் நீர்மின் உற்பத்தி தடை செய்யப்படும் அவதானத்திற்கு உள்ளாகியுள்ளமையினால் தனியார் பிரிவுகளில் மின்சக்தி கொள்வனவு செய்யப்படவுள்ளது.

தற்போது வரையில் 160 மெகாவோட் திறன்களை தனியார் பிரிவுகளில் கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.