ஆஸி.யில் டி20 தொடர், இந்தியாவில் டெஸ்ட் தொடர்: வார்னர் விமர்சனம்!!

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 19-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்தேதியும் நடக்கிறது.

அடுத்த நாள் 23-ந்தேதி இந்தியாவில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி விளையாட இருக்கிறது. அந்த அணி இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதனால் இந்தியாவிற்கு எதிரான தொடர் தொடங்குவதற்கு முன் துபாயில் சென்று பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதால் அந்த அணியின் முன்னணி வீரர்களான வார்னர், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், கவாஜா மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் டி20 அணியில் விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிடுகிறது. அந்த அணி இதுவரை டி20 கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பையை வென்றதில்லை.

இப்படிபட்ட சூழ்நிலையில் இதுபோன்ற டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டதற்கு வார்னர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வார்னர் கூறுகையில் ‘‘கிரிக்கெட் ஆஸ்திரேலியாதான் இந்த அட்டவணைக்கு முக்கிய காரணம். இங்கு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, நமது அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வெளிநாடு செல்ல இருக்கிறோம். இது எந்தவித பலனையும் உருவாக்கப்போவதில்லை. இது மிக கமிக மோசமான அட்டவணை’’ என்றார்.