யாழில் துவிச்சக்கர வண்டித் திருடனை மடக்கிப் பிடித்த பொலிஸார்!

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடியவரிடமிருந்து இன்று(09) ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன் போது அவரால் களவாடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 30 துவிச்சக்கர வண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபர் தொடர்பான இரகசியத் தகவல் ஊர்காவற்துறை பொலிஸாருக்குக் கிடைத்தது. இதன் பிரகாரம் துவிச்சக்கர வண்டி ஒன்றினை பேருந்தின் மேல் பகுதியில் ஏற்றியவாறு வேலணையில் வந்திறங்கியவரை கடந்த சனிக்கிழமை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து சந்தேக நபரிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வேலணைப் பகுதியில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை மீட்டனர்.

பல திருட்டுடன் தொடர்புடைய இந்த சந்தேகநபர் ஊர்காவற்துறை நீதிமன்ற மேலதிக நீதவான் எஸ்.கணேசன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

மண்டைதீவுப் பகுதியைச் சொந்த இடமாகவும் வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட நபரொருவரே குறித்த திருட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபராவார்.