யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி காணியை விடுவிக்கவேண்டும்! வைத்தியர்கள் கோரிக்கை

சிறுவர் வைத்தியசாலை அமைக்க, பண்ணையிலுள்ள யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான தற்போது இராணுவத்தினர் வசமுள்ள காணியை விடுவிக்க யாழ்ப்பாணத்துக்கு வரும் ஜனாதிபதி உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கு செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். எனவே, இழுபறியிலுள்ள இந்தக் காணி விடயத்துக்கும் அவர் உடனடித் தீர்வாக வைத்தியசாலை காணியை விடுவிக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு 2017ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில்1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு 1.5 ஏக்கர் காணி தேவையாக உள்ளது. காணி உரிய காலத்தில் கிடைக்காதுபோனால் நிதி வேறு இடத்துக்கு சென்றுவிடும் அபாய நிலை உள்ளது.

வைத்தியசாலைக்குரிய காணியைத் தானே விடுவிக்குமாறு கோருகின்றோம். யாழ்ப்பாணத்துக்கு வரும் ஜனாதிபதி அந்தக் காணியை விடுவிக்க உடனடி உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரியுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்குக் காணி இல்லாமை பெரிய பிரச்சினையாக உள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும், பண்ணையில் உள்ள வைத்தியசாலைக்குரிய காணியைப் பெற்றுத் தரும்படி பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளோம்.

சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கான காணியை பெற்றுக்கொள்வதற்கு நன் கொடையாளர்களிடமும் கேட்டுள்ளோம்.

வைத்தியசாலையின் அபிவிருத்தித் திட்டத்துக்காக நிதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. காணிகள் பெற்றுக்கொள்ள முடியாமையால் கிடைக்கப்பெற்ற நிதிகள் திரும்பிச் சென்றுள்ளன.

இது எங்கள் மக்களுக்கே பாதிப்பாக அமைந்துள்ளது. தூர இடங்களில் இருந்து வரும் வைத்தியசாலை ஊழியர்கள் தங்கி நின்று பணிபுரிவதற்கு விடுதி அமைக்க வேண்டியுள்ளது. அதற்கும் காணி தேவையாக உள்ளது.

வைத்தியசாலையின் பல அபிவிருத்தித் திட்டங்களுக்குக் காணிகள் இல்லாமை பெரிய பிரச்சினையாக உள்ளது.

இதற்கு புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வரும் எமது உறவுகளோ அல்லது தனி நபர்களோ வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள காணிகளை வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்குவதற்கு முன்வர வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.