ஈகுவேடரில் நிலநடுக்கம்: 2 பேர் பலி!

தென் அமெரிக்க நாடான ஈகுவேடரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடமேற்கு ஈகுவேடரில் பூமி அதிர்ந்தது.

கடற்கரை நகரமான எஸ்மரால்டாஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி இரவு முழுவதும் ரோடுகளிலும், தெருக்களிலும் தஞ்சம் புகுந்தனர். 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. ஏராளமான வீடுகளில் கீறல்களும், விரிசல்களும் ஏற்பட்டுள்ளன.

நில நடுக்கத்தால் 2 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 75 வயது பெண் ஒருவர் மாரடைப்பில் உயிரிழந்துள்ளார். 20 பேர் காயம் அடைந்துள்ளனர். மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே நிலநடுக்கம் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. எஸ்மரால்டஸ் நகரில் உள்ள அரசு எண்ணை சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அங்கு 5.4 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. எஸ்மரால்டஸ்சுக்கு அருகே 19 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.