ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதியாக மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பை விட அதிகளவு மக்கள் வாக்குகளை பெற்ற ஹிலாரி கிளிண்டன் மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

இத்தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தோல்வியை சந்தித்திருந்தாலும் வாக்குகள் அடிப்படையில் டிரம்பை விட 2.5 மில்லியன் வாக்குகள் கூடுதலாக ஹிலாரி பெற்றுள்ளார்.

ஆனால், மாகாண ரீதியான வாக்களிக்கும் விதிமுறைகளின் அடிப்படையில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் வெற்றியை திரும்ப பெற்றுக்கொண்டு வெள்ளை மாளிகைக்கு ஹிலாரி கிளிண்டனை அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் கையெழுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதாவது, அமெரிக்க வரலாற்றில் இதுவரை இதுபோன்று அதிகளவில் கையெழுத்து போராட்டத்தில் யாரும் ஈடுப்பட்டதில்லை.

இந்த கையெழுத்து போராட்டத்தை தொடங்கிய சமூக ஆர்வலரான Daniel Brezenoff என்பவர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற உள்ள வாய்ப்புகளை தெரிவித்துள்ளார்.

’அமெரிக்க தேர்தல் விதிமுறைகளில் அதிக மக்கள் வாக்கு எண்ணிக்கை பெற்றவர் ஜனாதிபதி ஆவார் என வகுக்கப்பட்டிருந்தால், தற்போது ஹிலாரி தான் ஜனாதிபதி.

ஆனால், தேர்தல் விதிமுறைகள் மாகாண வாக்குகளை அடிப்படையாக கொண்டுள்ளதால் தற்போது டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எனினும், ஹிலாரி கிளிண்டன் மீண்டும் ஜனாதிபதியாக ஓர் வாய்ப்புள்ளது.

அதாவது, பொதுமக்கள் வாக்குகளை தொடர்ந்து ஒருவர் உடனடியாக ஜனாதிபதி ஆக முடியாது.

இதன் அடுத்தக்கட்டமாக, ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள தேர்தல் அமைப்பை(Electoral College) சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய வாக்குகளை இறுதியாக பதிவு செய்ய வேண்டும்.

பெரும்பாலும், இந்த உறுப்பினர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு தான் வாக்களிப்பார்கள்.

ஆனால், அதே சமயம் தங்களுடைய விருப்பத்தை மாற்றிக்கொண்டு மாற்று வேட்பாளருக்கும் இவர்கள் வாக்களிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

இவ்வாறு இந்த தேர்தல் அமைப்பு உறுப்பினர்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்தால் அவர் நிச்சயமாக ஜனாதிபதியாக சட்டப்பூர்வமாகவே தெரிவு செய்யப்படுவார்.

தற்போது இந்த உறுப்பினர்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் நாங்கள் வைத்துள்ளோம்.

இதுபோன்ற நடவடிக்கை அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் நடந்தது இல்லை.

ஆனால், அதே சமயம், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக இதுபோன்ற கடுமையான போராட்டங்களும் முன்னர் நடந்ததில்லை.

எனவே, இவற்றை கருத்தில் கொண்டு மாகாண தேர்தல் அமைப்பு உறுப்பினர்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய முக்கிய கோரிக்கையாகும்’ என Daniel Brezenoff விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது வரை டிரம்பிற்கு எதிராக சுமார் 50 லட்சம் பேர் வரை கையெழுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

எதிர்வரும் டிசம்பவர் 19-ம் திகதி மாகாண தேர்தல் அமைப்பு உறுப்பினர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யவுள்ளதால் அதன் முடிவுகள் டிரம்பின் வெற்றியை முறியடிக்குமா என பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.