தூக்கத்தில் இருந்த சிறுமி மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு: கொலை செய்ய முயற்சியா?

பிரான்சில் தூக்கத்தில் இருந்த சிறுமி மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Bondy பகுதியில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 12 வயதான சிறுமி சம்பவத்தின் போது தமது படுக்கையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. திடுக்கிட்டு விழித்த சிறுமி சுதாரித்துக் கொண்டு அறையில் இருந்து வெளியேறும் முன்னர் துப்பாக்கி குண்டு ஒன்று சிறுமியின் முதுகு பகுதியில் தாக்கியுள்ளது.

வீட்டின் சுவரை துளைக்கும் அளவுக்கு அருகாமையில் இருந்து துப்பாக்கியால் தாக்கியுள்ளார்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறுமியின் படுத்திருந்த அறையை குறி வைத்து தாக்கிய அடுத்த சில நிமிடங்கலில் அந்த குடியிருப்பின் அருகாமையில் இருக்கும் இன்னொரு வீட்டின் முகப்பு வாதிலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி மீது பாய்ந்த அதே துப்பாக்கி தோட்டாவை அதே தெருவில் இருக்கும் வீட்டின் முகப்பு வாதிலில் இருந்தும் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவரையும் கைது செய்யவில்லை என கூறப்படுகிறது. காயமடைந்த சிறுமியை மீட்டு பொலிசார் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சிறுமியை கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கியால் சுட்டார்களா அல்லது இலக்கு தவறி சிறுமி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.