ட்ரம்ப்பின் தேர்வு குறித்து அதிருப்தி: வீதிக்கு இறங்கிய பாடசாலை மாணவர்கள்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால் ட்ரம்ப்பிற்கு எதிராக நாடு முழுவதும் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளமை சர்வதேசத்தின் பார்வையை அமெரிக்காவின் பக்கம் திருப்பியுள்ளது.

தலைநகர் வொஷிங்டன் டி.சி.யின் வீதிகளை பாடசாலை மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளதுடன், ட்ரம்ப்பின் தேர்வு குறித்து அவர்களின் எதிர்ப்பு நாடுமுழுவதும் பரவி வருகின்றது.

தலைநகரில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் ஒன்று திரண்டு 45ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ட்ரம்ப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் தமது பாடசாலை கல்வி நடவடிக்கைகளை புறக்கணித்த மாணவர்கள் ட்ரம்ப்பிற்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால் இருந்து தமது பேரணியை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மாணர்கள், ட்ரம்ப்பின் தெரிவின் பின்னர் பல்வேறு வெளிவராத பதற்றங்கள் உலாவுவதாகவும், அவை பேசுபொருளாக இல்லாது மக்களின் இயல்பு வாழ்க்கையை மறைமுகமாக தாக்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், தலைநகர் மாத்திரம் அன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் ட்ரம்ப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் குதித்துள்ளனர். அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக பாடசாலை மாணவர்களின் கிளர்ச்சி வெளிப்படுவது இதுவே முதன்முறை என்று சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.