ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி சூரனை சங்காரம் செய்தார் நல்லைக் கந்தன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த சூரசங்கார உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

நல்லூரில் இந்நிகழ்வானது பெருந்திரளான பக்தர்களின் மத்தியில் நேற்று(05) பிற்பகல் நடைப்பெற்றது.

முருகப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் முக்கிய விரதங்களில் ஒன்றான கந்தசஷ்டி கடந்த 31ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

ஆறாம் நாளான, நேற்று மாலை யாழ்.மாவட்டத்திலுள்ள முருகன், விநாயகர் ஆலயங்களில் சூரசங்கார நிகழ்வு இடம்பெற்றது.

இதன்படி, வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று பிற்பகல் மூலஸ்தானத்திலுள்ள வேற்பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆறுமுகப் பெருமான் அலங்கார நாயகனாக உள்வீதி வந்ததைத் தொடர்ந்து பிற்பகல் 05 மணிக்கு வெளிவீதியில் எழுந்தருளினார்.

படைக்கலங்கள் சகிதமாக எழுந்தருளிய ஆணவம் பொருந்திய சூரனை ஆட்டுக் கடா வாகனத்தில் வலது கரத்தில் வேல் ஏந்தி வந்த ஆறுமுகப் பெருமான் வதம் செய்து அருள்பாலித்தார்.

நல்லூரில் இடம்பெற்ற சூரசங்கார உற்சவத்தைக் காண யாழ்.குடாநாட்டின் பலபாகங்களிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருட்கடாட்சத்தைப் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் வழமை போன்று இவ்வருடமும் பெருந்திரளான அடியவர்கள் கந்தசஷ்டி விரதத்தின் ஆறுநாட்களும் தெப்பை அணிந்து பக்தி பூர்வமாக விரதம் அனுஷ்டித்து வருந்தமை குறிப்பிடத்தக்கது.nallur-soran011