4 வயது சிறுமியை நரபலி கொடுத்த கும்பல்..! அதிர்ச்சி அளிக்கும் காரணம்..!!

அசாம் மாநிலத்தில் தொலைந்து போன மொபைல் போனை கண்டுப்பிடிப்பதற்காக 4 வயது சிறுமியின் கழுத்தை அறுத்து நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள ரத்னாபூர் என்ற ஆதிவாசி கிராமத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் கைகள் துண்டிக்கப்பட்டு, தலை வெட்டப்பட்ட நிலையில் ஒரு சிறுமியின் உடல் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நரபலி கொடுக்கப்பட்ட சிறுமி சூனு கோட்பா கடந்த மாதம் 24 ஆம் தேதியில் இருந்து மாயமானதாக அவரது உறவினர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ரத்னாபூர் கிராமத்தில் குடியிருந்து வரும் ஹனுமன் பூம்ஜி என்பவரது மொபைல் போன் திருடு போனதையடுத்து, போனை மீட்டெடுக்கும் நோக்கில் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவரது நண்பர் ஒருவர் அளித்த ஆலோசனையின் பேரில் பூம்ஜி, கப்பார் சிங் என்ற மந்திரவாதியை அணுகினார்.

மொபைலை கண்டுப்பிடிக்க வேண்டும் என்றால் காளி தேவிக்கு 4 வயது சிறுமியை உயிர்ப்பலி தர வேண்டும் என்று அந்த மந்திரவாதி கூறியுள்ளார்.
இதனால் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி சூனு கோட்பாவை கடத்தி சென்று நரபலி கொடுத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய பூம்ஜி மற்றும் அவரது நண்பர் அலி ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். நரபலி பூஜை மேற்கொண்ட மந்திரவாதியை போலீஸார் தேடி வருகின்றனர்.