டாடாவின் குழுமத் தலைவராகும் தமிழர்

சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புக் கொண்ட டாடா குழுமத்தைக் கட்டுப்படுத்தும் டாடா சன்ஸ் போர்டில் தமிழகத்தைச் சேர்ந்த டாடா கன்சல்டிங் சர்வீஸஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நடராஜன் சந்திரசேகரன் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டாடா குழுமத் தலைவர் பதவியில் இருந்த சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரத்தன் டாடா மீண்டும் இடைக் காலத் தலைவராகியுள்ளார். அடுத்த நான்கு மாதங்களில் புதியத் தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார். இதற்கிடையே புதியத் தலைவராக யாரை நியமிக்கலாம் என டாடா சன்ஸ் போர்டு ஆலோசித்து வருகிறது. இதில் டாடா கன்சல்டிங் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான நடராஜன் சந்திரசேகரன், ஜாகுவார் லேண்ட் ரோவர் தலைவர் ரால்ஃப் ஸ்பெத் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.

அது தவிர ட்ரென்ட் நிறுவனத் தலைவர் நோயல் டாடாவின் பெயரும் பட்டியலில் இருக்கிறது. இவர் பதவி நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரியின் மைத்துனர் ஆவார். இந்த மூன்று பேரில் இருந்து ஒருவருக்கு டாடா குழுமத் தலைவராக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதே போல் ஜாகுவார் தலைவரையும் கூடுதல் இயக்குனராக டாடா சன்ஸ் நியமித்துள்ளது. டாடா போர்டில் தற்போது 11 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் நோயல் டாடாவுக்கு வாய்ப்பு அதிகம். ஜாகுவார் தலைவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் சிரமம். நடராஜன் சந்திரசேகரன் நீண்ட காலமாக டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருபவர். டாடா சன்ஸ் போர்டு உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர். அதனால் நடராஜன் சந்திரசேகரன் டாடா குழுமத் தலைவராக வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் டாடா சன்ஸ் போர்டின் கூடுதல் இயக்குனராக செவ்வாய்க்கிழமை சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து டாடா சன்ஸ் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தாங்கள் பொறுப்பேற்றுள்ள நிறுவனங்களை தலைமையுடன் வெற்றிகரமாக இயக்கிக் காட்டியதற்கு அளிக்கப்படும் பரிசு என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத் தலைவர் பதவிக்கு பெயர் அடிபடும் நடராஜன் சந்திரசேகரன் தமிழகத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊர் நாமக்கல். மாவட்டம் மோகனூர். கோவை பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரியில் இளங்கலையும் திருச்சி ரீஜனல் என்ஜீனியரிங் கல்லூரியில் எம்.சி.ஏவும் படித்தார்.

கடந்த 1987ம் ஆண்டு டி.சி.எஸ். நிறுவனத்தில் சேர்ந்தார். 2009ம் ஆம் ஆண்டு டி.சி.எஸ். நிறுவனத் தலைவர் ஆனார். இவரது தலைமையில் டி.சி.எஸ். நிறுவனம் சர்வதேச அளவில் மிக முக்கியமான தகவல் தொடர்பு நிறுவனம் ஆகியது. இந்த நிறுவனத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை டி.சி.எஸ். 16 பில்லியன் அமெரிக்க டாலர்களை லாபமாக ஈட்டியது.