பிரகாசமான வாழ்க்கைக்கு தினமும் தீபம் ஏற்றுங்கள்

தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால், அவர் மெய் உணர்வைப் பெற முடியும் என்று அப்பர் கூறியுள்ளார். காலை, மாலை இரு நேரமும் விளக்கு ஏற்றப்படும். வீடுகளில் பிரச்சினைகள் வராது. புண்ணியமும், ஞானமும் அதிகரிக்கும். எனவே தினமும் தீபம் ஏற்றுங்கள். அந்த தீப வழிபாடு எப்படி இருந்தால் நாம் மேலும் சிறக்க முடியும் என்பதை நமது மாலை மலர் மருத்துவர் டாக்டர் கமலிஸ்ரீபால் தனக்கே உரிய பாணியில் இங்கு தொகுத்து அளித்துள்ளார்.

தீப ஜோதி நமோஸ்துதே
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
ஆன்ம ஜோதி ரூப

– என இறைவனையும், ஆன்மாவையும் ஜோதி ரூபமாக ஒளி பிரகாசமாக வழிபட்டு வரும் முறையை நம் முன்னோர் பண்டைய காலத்திலிருந்தே வழிமுறை படுத்தி உள்ளனர். எந்த மதத்திலும் ‘தீப ஒளி’ ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எந்த ஒரு நல்ல நிகழ்வும் விளக்கு ஏற்றியே தொடங்கப்படுகின்றது. வீட்டிலும் சரி, கோவில்களிலும் சரி காலையும், மாலையும் தீபங்கள் ஏற்றுவது நமது கலாசாரம்.

திருவண்ணாமலை தீப தரிசனத்தினை வாழ்வில் ஒரு முறையேனும் தரிசிக்காத இந்து இருப்பது அரிது.
தீபம் புற ஒளியினை மட்டும் தருவதில்லை. தீபத்தினை வழிபடும் பொழுது வழிபடுபவரின் ஆன்ம ஒளியும், ஞான ஒளியும் கூடுகின்றது. ஏனெனில் தீபம் அதாவது அக்னி இருள், அழுக்கு இரண்டினையும் நீக்கி பரவி அனைத்தையும் தன் மயமாகவும், ஒளி மயமாகவும் ஆக்கி விடும். ஆகவேத்தான் நம் முன்னோர்கள் சூரியன், சந்திரன், அக்னியை வழிபட்டு வந்துள்ளனர்.
கோவில்களில் அணையா விளக்குகள் ஏற்றி வைப்பர். சுற்று விளக்கு, லட்ச தீபவிளக்கு என்று தீபத்தினை ஏற்றி போற்றி வழிபடுவர். வீடுகளில் அன்றாடம் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவர். வீட்டுக்கு வரும் மருமகளை ‘விளக்கேற்ற வந்தவள்’ எனப் போற்றுவர்.

விளக்குகள் பல வகைப்படுகின்றன.

அகல் விளக்கு    – சர்வ மங்கலங்களையும் அளிக்கும்
வெண்கல விளக்கு    – தோஷங்களை நீக்கும்
செம்பு விளக்கு    – மனதில் அமைதி தரும்
பித்தளை விளக்கு- குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும்
வெள்ளி விளக்கு    – அமைதி நிலவும்
தங்க விளக்கு    – ஆயுள் நீட்டிக்கும்
எவர்சில்வரில் விளக்கு ஏற்றுவதில்லை.

அதே போன்று விளக்குகள் குத்து விளக்கு, தூண்டா மணி விளக்கு, காமாட்சி விளக்கு, பாவை விளக்கு என பிரிவுபடும். இதில் குத்து விளக்கினை பிரம்மா, விஷ்ணு, சிவன் சேர்ந்த ரூபமாகக் கூறுவர்.

விளக்கேற்ற எண்ணெய் வகைகள் :

நெய் பயன்படுத்தினால் – சுகமும், ஞானமும் அதிகரிக்கும்
நல்லெண்ணை    – பீடா பரிகாரம்
இலுப்ப எண்ணெய்    – கடன் தொல்லை நீங்கும்
ஆமணக்கு எண்ணெய்    – சகல சம்பத்தும் கிடைக்கும்
தேங்காய் எண்ணெய் – கணபதி, குல தெய்வ ஆசீர்வாதம் கிடைக்கும்
ஐந்து எண்ணெய் கலந்தும் ஏற்றலாம்.

திரி வகைகள் :

பருத்தி பஞ்சு திரி – வீட்டில் மங்களம் நிலைக்கும்
தாமரைத்தண்டு – செல்வம் சேரும்,முன் வினை பாவம் நீங்கும்
வாழைத்தண்டு – தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும்
புதுமஞ்சள் வண்ண துணியில் திரி – திருமண தடை நீங்கம் புது வெண்மை
துணி திரி – சுகவாழ்வு, குடும்ப நலம்
வெள்ளெருக்குத் திரி – தன லாபம் அளிக்க வல்லது.

தீபம் ஏற்றும் முறை :

ஒருமுகமாக ஏற்றினால் – மத்திமம்
இரு முகம்    – குடும்ப ஒற்றுமை ஏற்படும்
மூன்று முகம்    – பிள்ளைகள் மேன்மை
நான்கு முகம்    – சொத்து சேரும்
ஐந்து முகம்    – செல்வ நிலை உயரும்

விளக்கு ஏற்றும் திசைகள் :

கிழக்கு    – லட்சுமி கடாட்சம் ஏற்படும், துன்பம் விலகும்
வடகிழக்கு    – தான தர்மங்கள் செய்வர்
மேற்கு    – பகை தீரும், கடன் நீங்கும்
தென் கிழக்கு – அறிவு பெருகும்
வடக்கு    – காரிய சித்தி ஏற்படும்
வடமேற்கு    – ஒற்றுமை நிலவும்.

தெற்கு புறமாக விளக்கு ஏற்றக்கூடாது.

மகா கணபதிக்கு தேங்காய் எண்ணெயும், பெருமாளுக்கு நல்லெண்ணையும், சிவபிரானுக்கு இலுப்ப எண்ணெயும், நெய்யும், முருகனுக்கு நெய்யும், சந்தன எண்ணெய்யும் உகந்தது.

இறைவனோடு நம்மை நேரடியாக சம்பந்தப்படுத்துவது தீப வழிபாடுதான்.

குளித்து சுகாதாரமான ஆடை அணிந்து தலையினை பிரித்து விடாமல் பின்னியோ, முடிந்தோ வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.
காலையில் 4.30-6 மணிக்கும் மாலையில் 5.30 – 6 மணிக்கும் பொதுவில் விளக்கேற்ற உகந்த நேரங்கள்.

அன்றாடம் பூஜை அறையில் தரையை சுத்தம் செய்து அரிசி மாவில் கோலம் இட்டு செம்பு தட்டுகளின் மேல் விளக்கினை வைத்து குங்குமம் இட்டு விளக்கேற்றி பூ வைத்து வழிபட வேண்டும்.

விளக்கினை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி அன்று சுத்தம் செய்யலாம். செவ்வாய், புதன், வெள்ளி அன்று சுத்தம் செய்யக்கூடாது.
சீயக்காய், வெந்தயம், பயத்தம்பருப்பு, பச்சரிசி, எலுமிச்சை தோல், அரைத்த மாவு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். எலுமிச்சை சாறு பூசலாம். தேங்காய் நார் கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான ப்ரத்யேக துணி கொண்டு நன்கு துடைக்க வேண்டும்.

டி.வி. பார்த்துக் கொண்டோ, பிறரிடம் பேசிக் கொண்டோ, ரேடியோ கேட்டுக் கொண்டோ விளக்கு ஏற்றாதீர்கள். விளக்கு ஏற்றுவது என்பது அங்கு இறை சக்தியினை கொண்டு வருவது. இது விளையாட்டு சமாச்சாரமல்ல. முழு கவனத்தோடு செய்யுங்கள். அக்னிக்கு என்று ஒரு மாபெரும் சக்தி உண்டு. ஒவ்வொரு மனிதனுள்ளும் அக்னி இருக்கின்றது. அந்த உள் ஒளியும், தீப ஒளியும் உங்கள் கவனத்தால் ஒன்று பட வேண்டும்.

ஊதுவத்தி, சாம்பிராணி காண்பியுங்கள். பொதுவில் கற்பூரம், ஊதுவத்தி இவற்றினை விளக்கின் தீபத்திலிருந்தே ஏற்றுகின்றனர். இது மிகவும் தவறானது. விளக்கினை ஏற்றவும், கற்பூரம், ஊதுவத்தி இவற்றினை ஏற்றவும் தீபக்கால் என்ற தனி விளக்கினை பயன்படுத்துங்கள். நெருப்பு குச்சி, ஊதுவத்தி என எந்த அக்னியையும் வாயால் ஊதி அணைக்காதீர்கள். அது மிகத் தவறானது. விளக்கேற்றி, பூ சாற்றி, ஊது வத்தி காண்பித்து உங்களால் முடிந்த நைவேத்தி யங்களை வையுங்கள்.

நைவேத்தியம் செய்யும் பொழுது மணி அடிக்க வேண்டும். சுத்தமாக கழுவிய கிழியாத வெற்றிலை, கொட்டை பாக்கு நன்கு கனிந்த கழுவிய பழங்கள் போன்றவை வழக்கத்தில் இருப்பவை. கோவிலிலும் சரி வீட்டிலும் சரி பூஜைக்கு தேங்காய் உடைப்பது ஐதீகம். தேங்காய் இறைவனுக்குத் தன்னையே சமர்ப்பிப்பதற்குச் சமம். மன அகங்காரத்தினை உடைப்பதற்குச் சமம். தேங்காயில் அனைத்தும் சுத்தமானது உபயோகப்படுவது சிறிதளவு தேங்காயே அதிக ஊட்டச்சத்தினைத் தருவது.

இதன் காரணமே விசேஷ நாட்களில் தேங்காய் வைத்துக் கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அத்தகைய தேங்காய் கண்ணுக்கு மேல் உச்சி தவிர நன்கு நாசினை உரித்து எடுத்து விடுங்கள். தேங்காயை நன்கு கழுவி தேங்காய் வெட்டு கல்லில் முறையாய் உடையுங்கள். இளநீரை நைவேத்தியத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். சிறிதும் நார் இல்லாமல் எடுக்க வேண்டும். ஏனோ தானோ என்று பிய்ந்த நாருடன் தேங்காயினை நைவேத்தியம் செய்யாதீர்கள்.

பாயாசம், வடை போன்ற நைவேத்தியங்களை சுட சுட சுகாதார முறையில் கொடுங்கள். அதே போன்று பூக்களை நீண்ட காம்புகளுடன் வைக்காதீர்கள். மாலை போல் அணிவித்தால் சாமி படங்களின் கண்களை மறைக்காது இருக்க வேண்டும். விளக்கிற்கு சுற்றி விடலாம். விளக்கை சுற்றி அலங்கரிக்கலாம்.

உதிரிப் பூக்களை பக்கெட் நீரில் நன்கு கழுவி எடுத்து சுத்தமான துணியில் ஒற்றி எடுப்பது நல்லது.
அது போன்று தீபம் சுடராய் இருக்க வேண்டும். திகு திகுவென்று கட்டுங்கடங்காமல் தீபம் எரியக்கூடாது. பொதுவில் ஸ்லோகங்கள் சொல்லும் பொழுது ஓரிரு கிராம்பு அல்லது ஏலக்காய் மென்று விழுங்கிதான் இறைவனின் நாமங்களைச் சொல்லுவர். ஏனெனில் சொல்லும் வாய் கூட நல்ல மணத்தோடு இருக்க வேண்டும் என்பதே இதன் கருத்து.

தீபத்தினை தூண்டி விட சிறிய வெள்ளிக் குச்சியினையோ அல்லது சுத்தமான சிறிய இலையின் காம்போ உபயோகிக்க வேண்டும்.
தீபம் ஏற்றும் பொழுது பின் வாசல் கதவை மூடி வைக்க வேண்டும். முன் வாசல் கதவை திறந்து வைக்க வேண்டும்.
வேண்டுதல் முடிந்த பிறகு கற்பூர ஆரத்தியோ, நெய் தீப ஆரத்தியோ காண்பிக்க வேண்டும்.

தீபத்தினை சாந்தி செய்ய பூ, பால் ஒரு துளி பயன்படுத்தலாம். இவ்வளவு செய்திகளும் தீபத்தின் முக்கியத்துவத் தினை மேலும் நன்கு அறிந்து கொள்வதற்காகவே சொல்லப்பட்டது. தீபாவளி என்பதன் பொருளே தீபங்களின் ஒளி கொண்டு கொண்டாடப்படும் பண்டிகை என்பதுதான். முதல் நாள் இரவு பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது.

அன்று தீபங்கள் ஏற்றுவதும் வீட்டில் பண்டிகை சாப்பாடு என வீடு களை கட்டும். மறுநாள் விடியற்காலை சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் குளியல் செய்து சாமி அறையில் வைத்துள்ள புது துணியில் மஞ்சள் தடவி உடுத்தி விளக்கேற்றி பூஜை செய்வர். தீபாவளி லேகியம், பட்சணம் என தீபாவளி பண்டிகையின் மகிழ்ச்சியே தனிதான்.

பலர் ‘கேதார கவுரி விரத’ பூஜையினை மாலையில் செய்வர்.

அமாவாசையும் சேருவதால் அதற்கான பூஜையும் சேரும். அநேகர் தீபாவளி மாலை அன்று குபேர லட்சுமி பூஜை செய்வர். வீடுகள் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். பெரியோர்களின் ஆசிகளை குடும்பத்தினர் பெறுவர். இரு நாட்களிலும் சைவ உணவினையே சாப்பிடுங்கள். இத்தகு தீபாவளி நன்னாளில் தீபம் ஏற்றுவதின் அரிய பலன்களை அறிந்து தீபங்கள் ஏற்றுங்கள்.