10 ஆண்டுகளாக பணி செய்யாமல் ரூ.8 கோடி ஊதியம் பெற்ற அரசு ஊழியர்

பிரான்ஸ் நாட்டில் 10 ஆண்டுகளாக எவ்வித பணியும் செய்யாமல் அரசு ஊழியர் ஒருவர் ரூ.8 கோடி ஊதியம் பெற்று வந்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேற்கு பிரான்ஸில் உள்ள Saint-Savine என்ற நகரில் போஸ்கோ ஹெர்மன்(55) என்பவர் கடந்த 2001 முதல் 2006ம் ஆண்டு வரை அரசு ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

போஸ்கோவிற்கு ஒவ்வொரு மாதமும் 4,000 யூரோ ஊதியமாக பெற்று வந்துள்ளார்.

எனினும், இவர் பணியாற்றிய துறையில் 2006ம் ஆண்டு புதிய அரசு ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பணியை போஸ்கோ ராஜினாமா செய்துள்ளார்.

போஸ்கோ தனது பணியை ராஜினாமா செய்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், அவருக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் சென்றுள்ளது.

ஏனெனில், 1984ம் ஆண்டு பிரான்ஸ் சிவில் சர்வீஸ் சட்டப்படி ஒரு அரசு ஊழியர் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினால், அவருக்கு மற்றொரு வேலை கிடைக்கும் வரை அவர் வாங்கிய ஊதியத்தில் 75 சதவிகிதத்தை தொடர்ந்து செலுத்தி வர வேண்டும்.

இதன் அடிப்படையில், 10 ஆண்டுகளாக பணிக்கு செல்லாத போஸ்கோவிற்கு ஒவ்வொரு மாதமும் 3,700 யூரோ ஊதியம் கிடைத்துள்ளது.

இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக போஸ்கோ 5,00,000 யூரோ(8,11,89,114 இலங்கை ரூபாய்) ஊதியம் பெற்றுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எனவே, இதுபோன்ற சட்ட நடைமுறைகளை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.