ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க வந்த பெண்கள் தொடர்பில் வெளியான தகவல்கள்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து நேற்று இரண்டு மருத்துவர்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவிற்கு இயந்திரத்தின் மூலம் பிசியோ தெரபி சிகிச்சை அளிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கவே இந்த சிங்கப்பூர் மருத்துவர்கள் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 22ஆம் திகதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ஆகியோரோடு அப்பல்லோ மருத்துவக் குழுவினர் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து இரண்டு பெண் மருத்துவர்கள் நேற்று சென்னை வந்துள்ளனர். இருவரும் பிசியோதெரபி அளிப்பதில் உலகப் புகழ் பெற்றவர்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த இதுவரையிலான சிகிச்சைகளின் விவரங்களை அறிந்துகொண்டு அடுத்தக்கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள உள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அதனுடன் பேசிவ் பிசியோதெரப்பி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை ஏற்கனவே அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் உடல் நிலை கருதி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தால் இந்த பயிற்சிகள் முழுமையாக அளிக்க முடியவில்லை.