ஐசிசி டெஸ்ட் தரவரிசை மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடிக்குமா இந்தியா?

நியூசிலாந்து அணியுடன் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் டெஸ்ட் போட்டியில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

கான்பூரில் நடந்த நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

டெஸ்ட் போட்டி தரவரிசையில் பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இளம் வீரர் விராத் கோஹ்லி தலைமையிலான இந்தியா (110 புள்ளி) 2வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 250வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ள இதில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றினால் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறுவது உறுதி என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கான்பூர் டெஸ்டில் 10 விக்கெட் கைப்பற்றி அசத்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.