தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே மிருகம் பசு!ஏன் தெரியுமா?

தொன்றுதொட்டு மனித இனம் தான் கண்டவற்றில், சிலவற்றையே மிக்க பயன் அளிப்பதாக அனுபவித்துள்ளது.

அதன் அடிப்படையிலேயே, அவற்றை போற்றி பாராட்டி தெய்வமாகவும் வழிபட்டு வந்திருக்கின்றது.

பசுவையே எல்லா இனங்களுக்கும் மேலாக வணங்கி, அட்சய பாத்திரமாக வற்றா ஊற்றாக போற்றி வருகிறது.

வேறு எதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் இந்து மதம் அளித்து வந்திருக்கிறது.

பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல், பசுத்தாய், கோமாதா என்று வழங்கி வந்திருக்கிறது.

பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே மிருகம் பசு மட்டுமே.எல்லாமே இறை வடிவம் என்றாலும், நாம் தொன்றுதொட்டு, சிலவற்றிலேயே, சில வடிவங்களிலேயே, அனைத்து குணங்களின் ஐக்கியத்தை உணர்ந்திருக்கிறோம்.

அர்த்த நாரீஸ்வரரில் சிவ – சக்தி ஐக்கியத்தையும்,
சங்கர நாராயணரில் சிவ – விஷ்ணு ஐக்கியத்தையும்,
லக்ஷ்மி நாராயணரில் விஷ்ணு – லக்ஷ்மி ஐக்கியத்தையும்,
நரசிம்மரில் மனித – மிருக ஐக்கியத்தையும்,
தாணுமாலயனில் ஹரி – ஹரப்ரும்ம ஐக்கியத்தையும்,
கணபதியில் யானை – தேவர்கள் ஐக்கியத்தையும்,

ஏகபாத த்ரிமூர்த்தியில் மூவரின் இணைவையும் காண்கிறோம்.

காலையில் எழுந்தவுடன் நம் உள்ளங்கைகளைப் பார்த்து நுனிப்பகுதியில் மகாலக்ஷ்மியும், இடையில் சரஸ்வதியும், கணுப்பகுதியில் பார்வதியும், (முச்சக்திகளும் இருப்பதை) நினைவுபடுத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது.

எனினும் தோட்டத்துக் கனியை அறியாமல் இருப்பதே பொது குணம் என்பதால் நாம் நம்மை அறிவதற்கு ஏதுவாக பரம்பொருளை, முதலில் பிறவற்றில் இருப்பதை உணர, பல வழிவகைகளை இந்து மதக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இவ்வடிப்படையில் தோன்றியதே கோபூஜை (பசு வழிப்பாடு).

எல்லோரும் தத்தம் வீட்டிலேயே, பசு வழிபாடு செய்ய இயலாதிருக்கலாம் என்றே ஒவ்வொரு ஆலயத்திலும், பசுத்தொழுவம் அமைத்து, அன்றாடமும், கோபூஜை நடத்தும் மரபு ஏற்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆலயத்திலும் “கோ சாலை” (பசு மடம்) இருந்தால் அருகில்வாழ் மக்கள் அனைவரும் பசு பராமரிப்பிலும், பசு வழிபாட்டிலும் கலந்து கொள்ள முடியும்.

தினமும் பசுமடத்தில் விரிவான பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வது மேன்மை.

அதோடு, முக்கிய நாட்களில் அல்லது பல்லோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நாட்களில், பெரிய அளவில் 108 கோ பூஜை, 1008 கோ பூஜை செய்யலாம்.