தொடர்ச்சியாக 11 தீவிரவாதத் தாக்குதல்கள்: கதி கலங்கி நிற்கும் பிரான்ஸ்!

உலகின் ஃபேஷன் நகரமான பாரீஸ் இப்போது கதிகலங்கி நிற்கிறது. பிரான்சில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடுகிறது. சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை நடந்த டிரக் தாக்குதலுக்கு ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இதுவரை தொடர்ச்சியாக பிரான்ஸ் மீது 11 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஜனவரி 7- 9 2015: கார்ட்டூன் பத்திரிகையான ’சார்லி ஹெப்டோ ’ அலுவலகம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு 8 கார்ட்டூனிஸ்ட்கள் உள்பட 12 பேர் பலியாகினர். அருகில் இருந்த யூத மார்க்கெட் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியாகினர். இந்த இரு தாக்குதலையும் நடத்தியவர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகளுடனான சண்டையில் போலீஸ்காரர் ஒருவரும் பலியாகினார்.

பிப்ரவரி 3 : நீஸ் நகரில் யூத மையத்திற்கு பாதுகாப்பாக நின்ற 3 போலீசார் மீது ஒருவர் கொலைவெறித் தாக்குதல் நடத்தினார். போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பிடிபட்ட முசா குலுபாலி என்பவர், தான் பிரான்சையும் யூதர்களையும் வெறுப்பதாகவும் அதனால் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிவித்தார்.

ஏப்ரல் 10 பாரீசில் காரில் பெண் ஒருவர் சுடப்பட்டு இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அல்ஜீரியாவை சேர்ந்த ஐடி மாணவர் சையத் அகமது என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது அறையை சோதனையிட்ட போது ஐஎஸ் இயக்கத்துடன் அவர் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. மேலும் கிறிஸ்தவ ஆலயத்தில் தாக்குதல் நடத்த சையத் அகமது திட்டமிட்டிருப்பதும் தெரிய வந்தது.

ஜுன் 26 பிரான்சை சேர்ந்த யாஷீன் அலி என்பவர் தான் பணி புரிந்து வந்த உரிமையாளரை கொடூரமான முறையில் கொலை செய்தார். பின்னர் அவரது தலையை சுற்றி ஐஎஸ் இயக்கத்தின் கொடியை நட்டு வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

ஜுலை 13 ராணுவ அதிகாரி ஒருவரின் தலையை ஐஸ் பாணியில் வெட்டத் திட்டமிட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.

ஆகஸ்ட் 21 ஆம்ஸ்டர்டாமில் இருந்து பாரீஸ் நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் மொராக்கோவை சேர்ந்த ஆயூப் எல் ஹசானி என்பவர் எந்திரத் துப்பாக்கியால் சராமரியாக சுட்டார். ரயிலில் பயணித்த பிரான்ஸ், அமெரிக்க, பிரிட்டன் பயணிகள் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். ஆயூப் எல் ஹசானி தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்தான்.

நவம்பர் 13 பாரீசின் ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து பிரான்ஸ் அணிகள் மோதிய கால்பந்து ஆட்டம் நடந்தது. மைதானத்தை சுற்றிலும் ரசிகர்கள் திரண்டிருந்தனர். போட்டியை பிரான்ஸ் அதிபர் ஹாலாண்டேவும் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது நடத்தப்பட்டத் தாக்குதலில் 9 பேர் பலியாகினர். தொடர்ந்து பட்சாலன் மண்டபத்தில் நடந்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலுக்கு 130 பேர் பலியாகினர். இந்த இரு தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.

நவம்பர் 18 மார்செலி நகரில் யூத ஆசியர் ஒருவரை ஐஎஸ் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து 3 மாணவர்கள் கத்தியால் குத்தினர். ஆனால் அவர் காயத்துடன் உயிர் தப்பி விட்டார்.

ஜனவரி 7, 2016 பாரீசில் ஐஎஸ் இயக்க கொடியுடன் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட, சல்லா அலி என்ற மொராகோவை சேர்ந்தவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

ஜுன் 13 பாரீசில் போலீஸ் அதிகாரி ஜீன் சால்விங் அவரது மனைவி ஜெசிகா ஸ்னைடர் ஆகியோர் வீட்டில் இறந்து கிடந்தனர். ஜெசிகாவின் கழுத்து ஐஎஸ் இயக்கத்தின் பாணியில் அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் ஜெசினா தனது மகன் கண் முன்னரே கழுத்து அறுக்கப்பட்டதும் விசாணையில் தெரிய வந்தது. கொலையில் ஈடுபட்ட , லரோசி அபல்லா என்பவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அபல்லா ஐஎஸ் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்.

ஜுலை 14 பிரான்சிஸ் தெற்கு கடற்கரை நகரமான நீஸில்,மக்கள் கூட்டத்திற்குள் டிரக் புகுந்ததில் 80 பேர் பரிதாகமாக இறந்தனர்.