பிளாஸ்டிக் பை சட்டையுடன் விளையாடிய சிறுவன்: சந்திக்க விரும்பிய மெஸ்ஸி

பிளாஸ்டிக் பை சட்டையுடன் விளையாடிய ஆப்கான் சிறுவனை லயோனல் மெஸ்ஸி சந்திக்க ஆர்வம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உதைப்பந்தாட்டத்தில் ஆர்வம் கொண்ட 5 வயதான முர்டாஸா அகமதி பார்சிலோனா உதைப்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்.

மெஸ்ஸியின் ஜெர்ஸி வாங்கித் தருமாறு கேட்ட சிறுவனுக்கு அவரது சகோதரன் பிளாஸ்டிக் பையாலான ஜெர்ஸி ஒன்றை தயாரித்து தந்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி, சிறுவன் முர்டஸா அகமதிக்கு உதவி செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுவன் முர்டஸா அகமதியை சந்திக்க லயோனல் மெஸ்ஸி ஆர்வமாக உள்ளதாகவும் இவர்கள் சந்திப்பு விரைவில் நடைபெறும் என ஆப்கானிஸ்தான் கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

அதேவேளையில் சந்திப்புக்கான இடம், தேதி இன்னும் இறுதிசெய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் முர்டஸா அகமதியை சந்திப்பது தொடர்பாக மெஸ்ஸி ஆப்கான் கால்பந்து சங்கத்தை தொடர்பு கொண்டார் எனவும்,

ஆப்கானிஸ்தான் வந்து முர்டஸாவை சந்திப்பதா அல்லது சிறுவனை ஸ்பெயின் அழைத்து செல்வதா அல்லது மூன்றாவது நாடு ஒன்றில் இருவரது சந்திப்பையும் நடத்துவதா,

என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக ஆப்கன் கால்பந்து சங்க செய்தி தொடர்பாளர் சயத் அலி காஸிமி தெரிவித்தார்.

ஆனால் இதுதொடர்பாக பார்ஸிலோனா நிர்வாகம் தரப்பில் எந்த கருத்தும் உடனடியாக தெரி விக்கப்படவில்லை.

ஆப்கானிஸ் தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் மெஸ்ஸி வருகையின் போது பாதுகாப்பு பிரச்சினை எழும்.

இதனால் ஐரோப்பிய நாடுகளில் சிறுவனின் சந்திப்பை நடத்துவதே நல்லது என காபூலில் உள்ள ஸ்பெயின் தூதரகம் கூறியுள்ளது.