சாதாரண மடிக்கணனியையும், டச் ஸ்கிரீனாக மாற்றலாம்: அசத்தும் புதிய தொழில்நுட்பம் (வீடியோ இணைப்பு)

நாம் பேசும் அலைப்பேசியில் முதலில் தொடுதிரை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர், சாதாரண மடிக்கணனிகள் மீதான மக்களின் ஆர்வம் குறைந்து வந்ததால் அவற்றிலும் தொடுதிரை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் சாதாரண மடிக்கணினிகள் பயன்படுத்துகிறவர்கள் இதற்காக தங்களது பழைய மடிக்கணனிகளை விற்று புதியது வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஆனால் தற்போது அவர்களின் கவலையை தீர்ப்பதற்காகவே சாதாரண மடிக்கணனியையும் தொடுதிரை வசதி கொண்டதாக மாற்றிக்கொள்ளும் வகையில் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவீடன் நாட்டை சேர்ந்த நியோநோடு என்ற நிறுவனம் தான் இந்த புதிய கருவியை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

‘ஏர் பார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யூ.எஸ்.பி. கருவியை பயன்படுத்துவது என்பது அவ்வளவு கடினமான செயல் இல்லை.

பென்டிரைவ் போல மடிக்கணனினில் பொருத்தினால் போதும், சாதாரண மடிக்கணனி, ஸ்கிரீன் மடிக்கணனியாக மாறிவிடும். கண்ணுக்கு புலப்படாத ஒளிக்கதிர்களை ஸ்கிரீனின் மேற்பரப்பில் செலுத்தும் அந்த கருவி டச் வசதியை தருகிறது.

இதன் மூலம் ஸ்கிரீனை பெரிதாக்கலாம், விண்டோவை மூவ் செய்யலாம். லிங்கை கிளிக் செய்யலாம், என பல செயல்களையும் மேற்கொள்ளலாம். குறிப்பாக. கைவிரல்கள் மட்டுமில்லாது எந்த பொருளைக் கொண்டு ஸ்கிரீனை தொட்டாலும் அது இயங்கும் என்பது கூடுதல் சிறப்பு.

இதற்காக எந்த பிரத்யேக மென்பொருட்களையும் நாம் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த கருவியின் ஒருபகுதியை யூ.எஸ்.பி. போர்ட்டிலும், மற்றொரு பகுதியை நமது மடிக்கணனி ஸ்கிரீனின் அடிப்பகுதியிலும் பொருத்தினால் போதும்.

முதற்கட்டமாக, 15.6 இன்ச் ஸ்கிரீன் மடிக்கணனிகளுக்கு மட்டுமே இந்த கருவி வெளியிடப்படவுள்ளது.

விண்டோஸ் மற்றும் குரோம் OSகளில் இயங்கும் கணனிகளில் பயன்படுத்தும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 50 டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள உலக நுகர்வோர் மின்னணுவியல் கண்காட்சியில் இந்த ஏர்பாக் கருவியை நியோநோட் நிறுவனம் காட்சிக்கு வைக்கவுள்ளது. பின்னர் இந்த கருவி மக்கள் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.