ஆஸ்துமா அவஸ்தை வெங்காயம் தீர்க்கும்!

வேறு எந்த காய்கறிகளிலும் இல்லாத, எல்லா சத்துக்களும் வெங்காயத்தில் இருக்கின்றன. மிக சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியும், வாய் துர்நாற்ற கிருமிகளை போக்கும் சக்தியும் வெங்காயத்தில் உள்ளது. வெங்காயத்தில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற மூலச்சத்துக்களும் இருப்பதால், உடலில் எவ்வகை சத்துக்கள் குறைவாக இருந்தாலும், அதை வெங்காயம் ஈடு செய்யும்.

வெங்காயம், ரத்த சிவப்பணுக்களை சுத்திகரித்து, ரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது. இருமலுக்கு மிகவும் நல்லது. வெங்காயச்சாறையும், தேனையும் சம அளவில் சாப்பிட்டால், தொண்டைப்புண் மற்றும் இருமல் குணமடையும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து உண்டு வந்தால், காய்ச்சல் தணியும். வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால், சிறுநீர் நன்றாக வெளியேறும்.

உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள், வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் குறையும். பசு நெய்யில் வெங்காயத்தை வதக்கி சீரகமும், கற்கண்டும் தேவையான அளவு சேர்த்து, உண்டு வந்தால் மூலச்சூடு தணியும். வெங்காயத்தை உணவில் தினமும் சேர்த்து வந்தால், இதய நோய்களைத் தவிர்க்கலாம். பல வகையான தோல் நோய்களுக்கும் இது பயன்படுகிறது.

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து வருவது நல்லது. முப்பது கிராம் வெங்காயத்துடன் ஏழு மிளகும் சேர்த்து நன்கு அரைத்து உண்டு வந்தால் வாந்தி, பேதி நிற்கும். சிறிது சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம். இது வாந்திபேதியின் போது உண்டாகும் தாகம், அயர்ச்சிக்கு நல்லது. பச்சை வெங்காயத்தை தினமும் நன்கு மென்று உண்டு வந்தால், பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது.

பாலுணர்வு சக்தியை அதிகரிக்க, வெங்காயம் சிறந்ததாகும். இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் வெங்காயச் சாறு சேர்த்து, தினமும் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் பாலியல் பிரச்னைகள் தீரும். ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை, குறைவாக இருந்தால், ரத்த சோகை ஏற்படும். இதை போக்க வெங்காயம் எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக வெங்காய சாற்றுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து பருகினால், ரத்த சோகை குணமடையும்.

வெங்காயம், வயிறு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வளிக்கும். ஏனெனில் இதில் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும், ஆன்டிபாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், வெங்காயத்தை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். சிறுநீர் கழிக்கும் போது, ஏற்படும் எரிச்சல் உணர்வு தீர, வெங்காயம் நல்ல தீர்வு. அதற்கு, 6 முதல் 7 கிராம் வெங்காயத்தை எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.

ஆஸ்துமா ஏற்படுத்தக் கூடிய, பயோகெமிக்கல் அமைப்பை போக்குவதில் வெங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது. ஆஸ்துமா நோயாளிகள் வெங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை கபம் உருவாகாமல் தடுக்க உதவுகிறது. வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது.