சுவிஸ் கை கடிகாரத்தில் இருக்கும் இந்திய பெண்மணி யார்? 80 வருடங்களாக தொடரும் மர்மம்

கை கடிகாரம்சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட கை கடிகாரத்தில் இந்திய பெண்மணி ஒருவரின் புகைப்படம் இடம்பெற்று இருந்தாலும், அந்த பெண் யார் என்ற தகவல்கள் கடந்த 80 வருடங்களாக மர்மமாகவே தொடர்ந்து வருகிறது.
சுவிஸின் யூரா மலைப்பகுதிக்கு அருகில் Le Sentier என்ற நகரில் Jaeger-LeCoutre என்ற உலக புகழ்பெற்ற கடிகாரம் நிறுவனம் அமைந்துள்ளது.

சுமார் 130 ஆண்டுகளாக புகழ்பெற்ற இந்த நிறுவனத்தின் கடிகாரங்கள் உலகம் முழுவதும் பிரபலம்.

மேலும், இந்திய கடிகார சந்தையில் இந்த நிறுவனத்தின் கடிகாரங்கள் 1890 முதல் 1947 ஆண்டு வரை பரபரப்பாக விற்பனையானது. இதற்கு கை கடிகாரங்களில் இந்திய பெண்மணி ஒருவரின் புகைப்படம் இடம்பெற்று இருப்பதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆனால், கடிகாரத்தில் இடம்பெற்றுள்ள பெண்மணி யார்? அவருடைய பின்புலம் என்ன என்ற எந்த தகவலும் இன்று வரை உறுதி செய்யப்படாமல் மர்மமாக நீடித்து வருகிறது.

எனினும், இந்த மர்மம் விலகும் வகையில் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள திரிபுரா மாநிலத்தை ஆண்ட கடைசி ராணியின் படமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

திரிபுராவை ஆட்சி செய்த மன்னர் இறப்பிற்கு பிறகு அவரது மகனிற்கு 14 வயதே நிரம்பியுள்ளதால், மன்னரின் மனைவியான கஞ்சன் பிரபா தேவி என்பவர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்.

1947 முதல் 1949 வரை ஆட்சி செய்த இவர் தான் கடைசி ராணி என்பதால், அவரது புகைப்படத்தை கடிகாரத்தில் பொறித்திருக்க வாய்ப்புள்ளது.

இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், கடிகாரத்தில் உள்ள பெண்ணின் உருவமும், கஞ்சன் பிரபா தேவியின் பழைய ஓவியமும் ஒரே சாயலில் இருப்பதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

கஞ்சம் பிரபா தேவியின் கொள்ளு பேரனான Pradyot Debbaraman(38) என்பவர் சுவிஸ் பத்திரிகையை தொடர்புகொண்டு ‘கடிகாரத்தில் உள்ள புகைப்படம் தன்னுடைய பாட்டியை தத்ரூபமாக காட்டுகிறது என கூறியுள்ளார்.

எனினும், அது கஞ்சன் பிரபா தேவி தான் என தன்னால் 100 சதவிகிதம் உறுதிப்பட கூற முடியவில்லை என தெரிவித்திருப்பதன் மூலம், சுவிஸ் கடிகாரத்தில் உள்ள இந்திய பெண் யார் என்ற மர்மம் இன்றளவும் நீடித்து வருகிறது.

தற்போது Jaeger-LeCoultre நிறுவன கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் இந்த சர்ச்சைக்குரிய கடிகாரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.