பசறை கனரல்லை மற்றும் வெல்லவாய ஆகிய இருவேறு பிரதேசங்களில் பதினொருவயதே நிரம்பிய இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

கனவரல்லையைச் சேர்ந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 19 வயது நிரம்பிய இளைஞன் பசறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள அதே வேளை வெல்லவாயவைச் சேர்ந்த சிறுமி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தில் இருவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மேற்படி இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலும் ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.

இதேவேளை கனவரல்லையைச் சேர்ந்த இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு  இன்று  நடவடிக்கை எடுத்திருந்தனர்.

கனவரெல்லையில் 

கடைக்கு மளிகைப் பொருட்கள் வாங்க வந்த சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே பெற்றோர் மேற்படி சம்பவம் தொடர்பாக, பசறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இம்முறைப்பாட்டையடுத்து குறிப்பிட்ட இளைஞனை பசறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி, பசறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய, பசறைப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

வெல்லவாயவில்

வெல்லவாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் பயிலும் பதினொரு வயது சிறுமி பாடசாலை விட்டு வீடு திரும்பும் வழியில் வழி மறிக்கப்பட்டு மூவரால் தினமும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து துரிதமாக செயற்பட்ட வெல்லவாய பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் சிறுமியை வெல்லவாய சிறுவர் நன்னடத்தைப் பிரிவிடம் ஒப்படைத்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு மற்றுமொரு சந்தேக நபரைத் தேடி வலை விரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை வெல்லவாய வைத்தியசாலையில் வைத்து பரிசோதனைக்குட்படுத்திய பின்னர் மொனராகலை மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பாதுகாப்பு பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைத்தனர்