மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 18ஆம் கணுவில், வெதிவத்தை பகுதியிலுள்ள நபர் ஒருவர் தனது கரவன் ரக வான் ஒன்றை விற்க, பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளார்.

அதன்படி நேற்று (12) பி.ப. 7.15 அளவில் வந்த அறிமுகமில்லாத இருவர் குறித்த வாகனத்தை தாம் வாங்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு, வாகனத்தை பரீட்சித்து பார்க்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, உரிமையாளர், தனது உறவினர் ஒருவரான சிறுவன் ஒருவருடன் வேனில் சென்றுள்ளனர்.
குறித்த நபர் மீகஹதென்னவை நோக்கி வாகனத்தை செலுத்தியுள்ளார். இதன்போது வாகனத்தின் பிற்பகுதி சில்லிலிருந்து ஏதோ சத்தம் வருவதாக தெரிவித்து குறித்த சிறுவனை இறங்கி பார்க்குமாறு கூறியதும், சிறுவன் இறங்கியவுடன் வாகனத்தை செலுத்தியுள்ளார்.
 இதனை அடுத்து வாகன உரிமையாளர், தமது வாகனத்தை குறித்த நபர் கொள்ளையிட முயல்வதை உணர்ந்து கூச்சலிட ஆரம்பித்துள்ளார்.
அதன் பின்னர், மீகஹதென்ன வைத்தியசாலைக்கு அருகில், வாகன உரிமையாளரை தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து மீகஹதென்ன பொலிசாருக்கு பி.ப. 8.30 இற்கு கிடைத்த தகவலை அடுத்து, உடனே செயற்பட்ட பொலிஸார், இரவு நேர ரோந்து வாகனத்தின் மூலம், கொள்ளையிடப்பட்ட வான் தேடி சென்றபோது,கொட்டஹ பிரதேசத்தில் குறித்த வாகனத்துடன் சந்தேகநபரையும் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இரண்டாவது சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள போதிலும், அவர் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர் 23 வயதான பிட்டபெத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை இன்று (13) மதுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.