தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் விசாரணை அறிக்கை : பதில் இல்லை!

விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் பற்றிய விசாரணை அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், இதுவரையில் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை குறித்துப் பதில் வழங்கவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓமந்தைச் சோதசனைச் சாவடியில் வைத்து தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் அரசாங்கத்திடம் சரணடைந்திருந்தனர்.

அரசாங்கத்திடம் சரணடைந்த இருவரையும் தடுப்புக் காவலில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தனர்.

அதன் பின்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும் விசாரணை நடத்தியிருந்தனர். அதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த விசாரணை அறிக்கைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து எவ்வித பரிந்துரைகளையும் இதுவரையில் முன்வைக்கவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது குறித்து நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து துரித கதியில் பரிந்துரைகளை முன்வைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாகவும் இரண்டு தடவைகள் நீதவான் சட்ட மா அதிபர், திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.