சேயாவின் மரபணு, சமன் ஜயலத்தின் மரபணு அறிக்கையுடன் பொருந்தியது

கொட்டதெனியாவப் பகுதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஐந்து வயது சிறுமி சேயாவின் கொலை வழக்கில் கொண்டயாவின் சகோதரன் சமன் ஜெயலத் என்பவரின் மரபணு குற்றத்துடன் ஒத்துப் போவதாக மினுவான்கொட நீதவான் தெரிவித்துள்ளார்.

இன்று ஜின்டெக் நிறுவனத்தால் வழங்கப்பட்ட சமன் ஜயலத் மற்றும் சேயாவின் தந்தையின் டீ.என்.ஏ அறிக்கையை மினுவான்கொட நீதவானிடம் சமர்ப்பிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்படி சிறுமி சேயாவின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளுடன் சமன் ஜயலத் என்ற சந்தேகநபரின் டீ.என்.ஏ மாதிரிகள் ஒத்துப் போவதாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இவர் முன்னதாக இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டைய்யா என்பவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இந்த வழக்கு தொடர்பில் முதலில் கைதான 17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரின் மரபணு குற்றத்துடன் ஒத்துப் போகாமையால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் கொண்டைய்யாவின் மரபணுவும் குற்றத்துடன் ஒத்துப்போகவில்லை என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொண்டைய்யாவின் சகோதரரான சமன் ஜெயலத்தின் மரபணு ஒத்துப் போயுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு தொடர்பில் சிறுமி சேயாவின் தந்தையையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அது குறித்த முடிவுகள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.