உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளில் இருவரின் நிலை கவலைக்கிடம்

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் 100 தமிழ் அரசியல் கைதிகளில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

தமிழ் அரசியல் கைதிகள் இன்றுடன் மூன்றாவது நாளாகவும்  உண்ணவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் 100 பேர், அநுராதபுரச் சிறைச்சாலையில் 30 பேர், மட்டக்களப்புச் சிறைச்சாலையில் 9 பேர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருவரும் உண்ணவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் செய்தியை எழுதிக்கொண்டிருக்கும் தறுவாயில் ஒரு வைத்தியர்,  உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் உடல்நிலையைப் பரிசோதனை செய்து கொண்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

உண்ணாவிரதம் இருக்கும் தமிழ்க் கைதிகள் சம்பந்தமாக சிறைச்சாலை ஆணையாளர் றோகண புஸ்பகுமார ‘தினச்செய்தி’க்குத்  தகவல் தருகையில், எல்.ரி.ரி யுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று 221 பேருக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 40 பேருக்கு வழக்குகள் நடைபெற்று தண்டணை அழிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மீதி 61 பேரின் வழக்குகள் நீதிமன்றில் உள்ளது. இந்த வழக்குகள் ஒரு தவணைக்கும் இன்னொரு தவணைக்கும் இடையில் ஆறு மாத காலத்திற்கு மேலான அவகாசத் தவணையாக நீதிமன்றம் வழங்குகின்றது என்று உண்ணாவிரதக் கைதிகள் கூறுகின்றார்கள் என்றும், சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுடன் தாம் இரண்டு தடவைகள் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும், இப்பொழுது இந்த உண்ணாவிரதப் போராட்டம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கோ இன்றேல் சிறையதிகாரிகளுக்கு எதிராகவோ அல்ல என்றும், இது தமது விடுதலை சம்பந்தப்பட்டது என்றும் றோகண புஸ்பகுமார கூறினார்.

இதையடுத்து அவர்கள் தந்த வேண்டுகோள் அடங்கிய கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளருக்கும், சட்ட ஒழுங்கு அமைச்சருக்கும் அனுப்பி வைத்துள்ளதாகக் கூறினார்.

மேலும், இந்தப் பிரச்சினை சம்பந்தமாக சட்ட ஒழுங்கு அமைச்சர் செயலாளருடனும், ஜனாதிபதியின் செயலாளருடனும் தாம் பேசியுள்ளதாகக் கூறினார்.

மேலும், மூன்றாவது நாள் நடைபெறும் உண்ணாவிரதத்தின் நிலையை அவதானித்து மீண்டும் ஜனாதிபதி செயலாளருடனும், சட்ட ஒழுங்கு அமைச்சர் செயலாளரிடம் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகள் பற்றி பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.