மரணதண்டனையில் மாற்றமில்லை: அரசு தெரிவிப்பு

இலங்கையில் மரணதண்டனை மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும், அந்தத் தண்டனையை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.wijedasa1

மரணதண்டனை தொடர்பில் முன்னர் எடுக்கப்பட்ட முடிவுகளில் எவ்வித மாற்றமுமில்லை எனவும், வெகுவிரைவில் நடைமுறைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீதியமைச்சர் “விஜேதாச ராஜபக்ஷ” கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

மரணதண்டனையை நிறைவேற்றும் விடயத்தில் எமது வெளிவிவகார அமைச்சு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது.

இந்தத் தண்டனையை நிறைவேற்றுவதால் நாட்டில் குற்றங்கள் குறையப் போவதில்லை எனப் பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

எனினும், அண்மையில் ஐந்து வயதுச் சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாலேயே ஜனாதிபதி மீண்டும் தூக்குத்தண்டனையை அமுல்படுத்தவேண்டும் என்ற தொனியில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அத்தண்டனை அடுத்த வருடம் முதல் அமுலாக்கப்படும் என அவர் கூறவில்லை. இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்த பின்னரே இறுதி முடிவை எடுக்கலாமென ஜனாதிபதி கூறியிருந்தார்.

ஜனாதிபதி-மைத்திரிபால-சிறிசேன

இது தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டதே தவிர, வாக்கெடுப்பு எதுவும் நடைபெறவில்லை. எனவே, இறுதித் தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.