இலங்கையில் 2வது இன்னிங்ஸ்: முத்தையா முரளிதரனுடன் கைகோர்த்த சச்சின் டெண்டுல்கர்! (வீடியோ இணைப்பு)

உயிர்கொல்லி நோய்க்கு எதிராக நான் எனது இன்னிங்சை தொடங்கவிருக்கிறேன் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

யுனிசெஃப் நிறுவனத்தின் பிராந்திய நல்லெண்ணத் தூதுவரான சச்சின் டெண்டுல்கர் சிறார்கள் மத்தியில் சுத்தம் மற்றும் சுகாதாரப் பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்திற்காக இலங்கை சென்றுள்ளார்.

இவருடன் இலங்கையின் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனும் இந்தப் பணிக்காக கைகோர்த்துள்ளார்.sachin_murali_002

இந்நிலையில் கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வில் இரண்டு கிரிக்கெட் நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய சச்சின் டெண்டுல்கர், “வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் தினமும் பெருமளவிலான சிறார்கள் உயிரிழக்கிறார்கள்.

இந்த 2015ம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 600 சிறார்கள் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் உயிரிழக்கிறார்கள் என்ற இந்த செய்தி மிகவும் கவலையை தருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர அனைவரும் ஒன்று சேர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

முரளிதரன் பேசுகையில், “நாங்கள் இந்த இடத்தில் இருப்பதற்கு பொதுமக்கள் தான் காரணம். அவர்களின் பாதுகாப்பில் எங்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது.

மேலும், சிறுவர்களை தொற்று நோய்களிருந்து பாதுகாப்பதற்கு முதலில் பின்தங்கிய பகுதிகளில் மலசலகூட வசதி இல்லாமல் இருக்கும் நபர்களுக்கு அவ்வசதியை பெற்று கொடுப்பதோடு அடிப்படை பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

யுனிசெஃப் நிறுவனத்தின் இலங்கை நீர்-சுகாதாரப் பிரிவு அதிகாரியான ராதிகா சிவகுமாரன் கூறுகையில், விளையாட்டு நட்சத்திரங்களின் மூலம் சிறார்களிடம் நல்ல செய்தியை கொண்டுசெல்ல முடியும் என்ற நம்பிக்கையிலேயே யுனிசெப் சச்சின் டெண்டுல்கர் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரை இந்தப் பணியில் இணைத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.